பழனி முருகன் தரிசனத்தில் எது சிறந்தது? அலங்கார தரிசனமா? கற்சிலை தரிசனமா? பழனி முருகன் கோவிலில் சாதாரண நிலையில் இருக்கும் வடிவத்தைப் பார்ப்பதைவிட ராஜ அலங்காரத்தை நிறைய பேர் பார்க்கிறார்கள். இதுபோன்று தேர்ந்தெடுத்துப் பார்ப்பது என்பது சரியானதா?
பொதுவாக இறைவனை பல தேவைகளுக்காக வேண்டுகிறோம். அதில் முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக. பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பிப் பார்ப்பார்கள்.
ஜோதிடப்படி பார்க்கும் போது செவ்வாய் கிரகம் முருகனுக்கு வருகிறார். அதிலும் இந்த பழனி முருகன் கொஞ்சம் ஞானக்காரகனாக இருக்கிறார். மேலும், இந்தச் செவ்வாயுடன் குருவும் கலக்கிறார். வீரம், தைரியம் இதற்கெல்லாம் உரியது செவ்வாய். இந்த வீரமும், தைரியமும் இருந்ததால்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு அவர் வந்து இங்கு நிற்க முடிந்தது. ஆனால் நின்ற உடனேயே அங்கு குரு வந்துவிடுகிறார். செவ்வாயாக வீரவேசத்துடன் கிளம்பி குருவாக நிற்கிறார்.
வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று. 20 வருடமா வாதாடிக் கொண்டிருக்கிறேன். தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார். தீராத நோய், மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.
மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனைக் கண்கூடாகப் பார்க்கிறோம். பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும்.
பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறோம், பத்திரிக்கை அடித்து கும்பிடப் போகிறோம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.
நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம். நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம்.