பாலாற்றின் குறுக்கே தடுப்பணை. தடுக்க முயன்ற ஆர்ப்பாட்டத்தால் எல்லையில் பதட்டம்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை. தடுக்க முயன்ற ஆர்ப்பாட்டத்தால் எல்லையில் பதட்டம்

dam_2926196fபாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயர்த்தும் பணியை ஆந்திர அரசு ரூ. 49 லட்சம் செலவில் ஆரம்பித்தபோதே தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. முதல்வர் ஜெயலலிதா இதுகுறித்து ஆந்திர முதல்வருக்கு கடிதமும் எழுதினார். ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி பாலாற்றில் குறுக்கணை கட்டும் பணியை ஆந்திரா நிறைவு செய்துள்ளது. இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று தமிழக-ஆந்திர எல்லையில் திடீரெஅன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆட்சிக் காலத்தில் பாலாற்றின் குறுக்கே 0.6 டிஎம்சி கொள்ளவு கொண்ட சிறிய அணைகட்ட முயற்சி செய்தார். இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அணைகட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பில்,சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பத்தில் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள திம்மம்பேட்டை அருகே உள்ள ஒரு தடுப்பணையின் உயரத்தை 2 அடி வரை உயர்த்த முடிவு எடுத்தார். இதற்காக ரூ.49 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

இதையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, தடுப்பணையை உயர்த்தும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என கோரி சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதினார். பிற அரசியல் கட்சிகளும் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தன.

எனினும் எதிர்ப்பை மீறி ஆந்திர அரசு தடுப்பணையை உயர்த்தும் பணிகளை ரூ. 49 லட்சம் செலவிட்டு நிறைவு செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர், நேற்று ஆந்திர அரசை கண்டித்து திம்மம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் இரு மாநில எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டதால் தமிழக, ஆந்திர போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

Leave a Reply