பான் எண் இருந்தால்தான் வங்கிக்கணக்கு. நிதியமைச்சர் அருண்ஜெட்லி தகவல்
இனிமேல் எந்த வங்கியில் கணக்கு தொடங்கினாலும் அதற்கு பான் எண் அவசியம் என மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அருண்ஜெட்லி, ”உணவு கட்டணம், வெளிநாட்டு பயண டிக்கெட் போன்றவற்றுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலவழித்தால் ‘பான்’ எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது.
அதேபோல், அனைத்து வகையான வங்கி கணக்கு தொடங்குவதற்கும் ‘பான்’ எண் கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக எந்த பொருளை வாங்கினாலும், விற்றாலும் ‘பான்’ எண் கட்டாயமாக்கப்படும். இதற்கான முறையான அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும். உள்நாட்டில் கருப்பு பணம் புழங்குவதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் ஜன்தன் திட்டத்தின் கீழ் துவங்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டும் பான் எண் கட்டாயமில்லை என வருவாய்த்துறை செயலாளர் கூறியுள்ளார்.
English Summary:PAN Card to be mandatory for cash transactions beyond threshold, says FM Arun Jaitley