பிரதமர் மோடிக்கு டாக்டர் பட்டம். மோடி மனைவி உண்ணாவிரதம்
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்று பிரதமர் பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடிக்கு இந்து பல்கலைக்கழகம் ஒன்று டாக்டர் பட்டம் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, பட்டமளிப்பு உரை வழங்க உள்ளார். பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை ஓட்டி, இலக்கியம், கல்வி, கலாசாரம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். மேலும், புதுமை படைத்தல், சீர்திருத்தம், அரசியல் மற்றும் ஆட்சிப் பணிகள் ஆகியவற்றில் பிரதமர் மோடி ஆற்றிய தன்னிகரற்ற சேவைகளைப் பாராட்டி, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதமருக்கு டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட அதேநாளான நேற்று பிரதமரின் மனைவி யசோதா பென் உண்ணாவிரதம் இருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் குடிசைகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் நேற்று ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். மும்பையில் மழைக்காலத்தில் குடிசைகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, “குட் சாமரிட்டன் மிஷன்’ என்ற அமைப்பு சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் யசோதா பென்னும் கலந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மழைக்காலத்தில் குடிசைகள் இடிக்கப்படுவது குடிசைவாதிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்’ என்றார்.