பஞ்சாட்சரம் என்பது ஐந்து எழுத்துக்களால் ஆனது என்று பொருள். இவை “நமசிவய” என்பதாகும்.
இந்த எழுத்துக்களில், ந – பிருதிவியையும், ம – அப்புவையும், சி -தேயுவையும், வ- வாயுவையும், ய – ஆகாயத்தையும் குறிக்கும்.
மனித உடம்பில் சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்கின்ற ஆதாரங்கள் இந்த பஞ்சபூதங்களுக்கு உரிய இடமாகும் என்கிறார் திருமூலர்.
மேலும், மனித உடம்பில் நமசிவாய என்பது, ந – சுவாதிஷ்டானதில், ம – மணிபூரகத்தில், சி – அனாகதத்தில், வ – விசுத்தியில், ய – ஆக்ஞையில் இருப்பதாக சொல்கிறார்.
திருஞான சம்பந்தர் நான்கு வேதங்களுக்கும் மெய்பொருளாக விளங்குவது ”நமசிவய” என்றும் இது எல்லாவற்றிற்குமான நாதன் நாமம் என்றும் சொல்கிறார் .
“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவயவே “
– திருஞான சம்பந்தர் –
“நானேயோ தவம் செய்தேன் சிவயநம எனப் பெற்றேன் ” என்று பஞ்சாட்சர மகிமையை மாணிக்க வாசகரும் கூறுகிறார்.
“அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே”
– திருமூலர் –
“சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே”
– திருமூலர் –
என்று திருமூலர் பஞ்சாட்சர மகிமையை விளக்குகிறார்.
“சிவாய மென்ற அக்கரம் சிவனிருக்கும் அக்கரம்
உபாயம் என்று நம்புதற் குண்மை யான அக்கரம்
கபாடம் அற்ற வாசலைக் கடந்து போன வாயுவை
உபாயம் இல்ல ழைக்கும் சிவய அஞ்செ ழுத்துமே”
– சிவவாக்கியார் –