சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. தேர்தலை சந்திப்போம். பாண்டவர் அணி
திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சங்க தேர்தலை மட்டும் தவிர்க்க பலர் முயற்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை என பாண்டவர் அணியின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சரத்குமார் மற்றும் பாண்டவர் அணியின் தேர்தல் மோதல், நிரந்தரமான மோதலாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் கலைப்புலி எஸ்.தாணு, கே.பாக்யராஜ் உள்பட ஒருசிலர் இருதரப்பினர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த விஷால் அணியினர், தமிழ்த்திரையுலகில் மொத்தம் 27 சங்கங்கள் இருக்கின்றன. அனைத்து சங்கங்களுக்கும் ஜனநாயக முறைப்படி ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சங்க தேர்தலை மட்டும் நிறுத்த முயற்சிப்பது ஏன்> என கேள்வி கேட்டுள்ளனர். இதுகுறித்து பாண்டவர் அணி விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: தேர்தல் வர இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் , தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் , தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் , தொழிலாளர் சம்மேளனம் இணைந்து உருவாக்கிய கூட்டறிக்கை எங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது பார்த்து நாங்கள் தெரிந்து கொண்டோம். உங்கள் அனைவரின் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால், இந்தத் தேர்தல் மூலம் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்கிற உங்களது பயம் எதற்காக என்று தெரியவில்லை. அந்தப் பயத்திற்கு சில விளக்கம் அளிப்பது எங்களது கடமையாக நினைக்கிறோம்.
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று குறைந்த பட்சம் 27 சங்கங்கள் இருக்கிறது. அனைத்து சங்கத்திற்கும் 3 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் முடிந்து இன்றுவரை எல்லோருமே ஒற்றுமையாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 10 வருடம் தேர்தலே நடக்காத நடிகர் சங்கத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் ஜனநாயாக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்கிற எங்கள் பாண்டவர் அணியின் மூலம் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்கிற உங்களது பயம் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் கூட கடந்த முறை தேர்தல் நடந்த போது நீங்கள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கி , அதன் பிறகு தேர்தலை நடத்தி இப்போது நீங்கள் பதவியில் இருக்கிறீர்கள்! ஒற்றுமையாகவும் இருக்கிறீர்கள் ! இப்படி , உங்கள் அனைவருக்கும் பொருந்துகிற ஜனநாயக தேர்தல் எங்களுக்கு மட்டும் ஏன் பொருந்தாது என்று நினைக்கிறீர்கள்.
நீங்கள் ஒற்றுமையாக இருப்பது போல் நாங்கள் மட்டும் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியாது ? நடிகர் சங்க தேர்தலில் எங்களால் மட்டும் பிளவு ஏற்படும் என்று நீங்கள் குழம்புவது ஏன் என்று புரியவில்லை. நடிகர் சங்கத் தேர்தலின் வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதிப் பட்டியலும் தயாராகிவிட்டது. தபால் ஓட்டு போடுபவர்களுக்கான அந்த மனுவவை தேர்தல் அதிகாரி அனுப்பப்படவுள்ள இந்த நிலையில் , பாண்டவர் அணியால் மட்டும் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்றஉங்கள் அறிக்கை எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது, மன வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தக் கருத்தை எங்களிடம் சொல்வதைவிட கடந்த 10 வருடங்களாக தேர்தலில் நிற்காமலேயே பதவியில் இருப்பவர்களிடம் சொன்னால், நல்லதை செய்யத் துடிக்கும் இந்த பாண்டவர் அணி அதை பெருமையாக வரவேற்போம்.
இந்தத் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் போராடி வருகிறோம். கடைசி வரை நாங்கள் அனைவரும் அதில் உறுதியாக நிற்ப்போம். இந்த தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம். இந்த கூட்டறிக்கையை வெளியிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி.
இவ்வாறு விஷால் அணி தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.