சபரிமலை: சபரிமலை, பங்குனி உத்திர திருவிழாவில், பம்பையில் அய்யப்பனுக்கு, நாளை ஆராட்டு நடக்கிறது. இங்கு தினமும், மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக, உற்சவ பலி நடைபெற்று வருகிறது. யானை மீது சுவாமி எழுந்தருளும் ஸ்ரீபூதபலி நிகழ்ச்சியும் உண்டு. ஒன்பதாம் திருவிழாவில், இன்று இரவு அத்தாழ பூஜைக்கு பின், சுவாமி பள்ளிவேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருள்வார். பள்ளி வேட்டை முடிந்து சன்னிதானம் திரும்பி, கோயில் முன்புற மண்டபத்தில், பள்ளி உறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. நாளை அதிகாலை, 5 மணிக்கு, நடை திறந்ததும் சுவாமி கோயிலில் எழுந்தருளுவார். பின் அபிஷேகம் நடைபெறும். காலை, 7 மணிக்கு, நெய் அபிஷேகம் நிறைவு செய்யப்படும். பகல், 12 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். தந்திரி, மேல்சாந்தி மற்றும் பூஜாரிகள், அய்யப்பனின் ஆராட்டு விக்ரகத்துடன் பம்பையில் குளித்து ஆராட்டு நடத்துவர். அன்று மாலை, 4 மணிக்கு, ஆராட்டு பவனி பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு புறப்படும். இரவு, 10 மணிக்கு, சன்னிதானம் வந்ததும் கொடி இறக்கப்பட்டு, திருவிழா நிறைவு பெறும்.