ஆட்சியை பிடிக்க நினைக்கும் சசிகலாவின் பகல் கனவு பலிக்காது. ஓபிஎஸ்

ஆட்சியை பிடிக்க நினைக்கும் சசிகலாவின் பகல் கனவு பலிக்காது. ஓபிஎஸ்

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே ஆட்சியை பிடிப்பது யார் என்ற மல்லுக்கட்டு நடைபெற்று வரும் நிலையில் கவர்னர் தரப்பில் இருந்து அறிக்கைவிட்டதாகவும், அறிக்கை விடவில்லை என்றும் மாறி மாறி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று தொண்டர்களிடையே உற்சாகத்துடன் பேசிய முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ‘கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றலாம் என்ற சசிகலாவின் கனவு பலிக்காது’ என்று சூளுரைத்தார். அவர் மேலும் கூறியதாவது:  

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை நிறுவி அரும்பாடுபட்டு வளர்த்த இயக்கம், அவருடைய மறைவுக்கு பின்னால் ஜெயலலிதா அ.தி.மு.க. என்ற ஆலமரத்தை தாங்கி நிற்கின்ற ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான விழுதுகள் ஆலமரமாக இன்றைக்கு ஜெயலலிதாவின் கடும் உழைப்பால், அவருக்கு வந்த சோதனைகள், வேதனைகளை தாங்கி இந்த இயக்கத்தை 1½ கோடிக்கும் அதிகமான தூய தொண்டர்கள் கொண்ட இயக்கமாக, யார் வந்தாலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக ஜெயலலிதா உருவாக்கி தந்திருக்கிறார்.

ஜெயலலிதா பொதுக்கூட்டங்களில் உரையாடும்போது, “நம்முடைய இயக்கத்தை பற்றி ஒரு கருத்தை சொல்லுவார். இந்த இயக்கம் 100 ஆண்டுகள் அல்ல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும். மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளை தொடர்ந்து ஆற்றும்” என்று கூறுவார்.

அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு நம்முடைய கழகமும், ஆட்சியும் மக்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர்கள் கையில் கட்சியையும், ஆட்சியையும் கொடுப்பதற்கு தமிழக மக்களே எழுந்து நின்று அறவழி போராட்டத்தில் ஒருமித்த கருத்தோடு எழுந்து நிற்கிறார்கள்.

யாரும், எந்த சுயநல சக்திகளும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கத்தை கைப்பற்ற முடியாது. கைப்பற்றுவதற்கும் நாங்கள் விடமாட்டோம். இந்த இயக்கம் அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர்களின் சொத்து. யாருடைய குடும்ப சொத்தும் அல்ல. இது யாருடைய குடும்ப சொத்தாக தமிழக மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இதற்காக உறுதியேற்று நாம் எல்லாம் ஒருமித்த உரிமைக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறோம். உறுதியாக நல்லது நடக்கும்.

கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க நினைக்கும் சசிகலாவின் பகல் கனவு பலிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply