மழைக்கால மாலை நேரத்தைச் சுவையானதாக மாற்ற ஒரு கோப்பை தேநீரும் சுடச்சுட கொறிக்கும் உணவும் இருந்துவிட்டால் போதும். கொறிப்பதற்கு பகோடா கிடைத்துவிட்டால் அந்த நாளின் இனிமைக்கு ஈடு இணையே இருக்காது. வெங்காய பகோடாவை மட்டுமே சுவைத்து வெறுத்துப் போனவர்களுக்கு விதவிதமாக பகோடா செய்யக் கற்றுத் தருகிறார் சென்னை போரூர், காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். கைவினைப் பொருட்கள் செய்வதில் வல்லவரான இவர், சமையலிலும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கின்றன பக்கோடா வகைகள்.
பனீர் பக்கோடா
என்னென்ன தேவை?
பனீர் – 1 கப்
கடலை மாவு – 1 கப்
சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா 1 டீஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கு
எப்படிச் செய்வது?
கடலை மாவுடன் சோள மாவு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து சதுரமாக நறுக்கிய பனீரைச் சேர்த்துப் பிசையவும். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பனீர் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். இந்தப் பனீர் பக்கோடாவை தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.