பல சங்க இலக்கியங்களில், கடவுள் வாழ்த்துப் பகுதியிலும், மற்ற பல இடங்களிலும், சிவபெருமானைப் பற்றிய குறிப்பு காணப்பட்டாலும், முழுவதும் சிவபெருமானின் புகழை எடுத்துரைக்கும் நூல்கள் ஏதுமில்லை.
சமண, புத்த சமயங்கள் ஓங்கி நின்று, இந்து சமயம் நலிவுற்ற நிலையில், சைவ சமயம் தழைத்தோங்க, இறைவனின் அருளால், கி.பி. ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுந்தவை தேவாரப் பாடல்கள். இறைவனுக்கு சூட்டப்பட்ட சொல் மாலைகள் என்ற பொருள் பட, தேவாரம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்தப் பாடல்கள், திருஞானசம்பந்தர், அப்பர் என்கிற திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் அருளப்பட்டன.
இவர்கள் ஒவ்வொருவரும், ஆயிரக்கணக்கில் பாடல்கள் அருளினார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால், தேவாரப் பாடல்களை சிதம்பரம் திருக்கோயிலில் நம்பியாண்டார் நம்பி கண்டெடுத்தபோது, மிகவும் குறைவான பாடல்களே கிடைத்தன. எஞ்சியவை செல்லரித்துக் காணப்பட்டன. கிடைத்த தேவாரப் பதிகங்களை, பாடல்களுக்கு உரிய பண்ணின் முறைப்படி, முதல் ஏழு திருமுறைகளாக அவர் வகுத்தார்.
திருஞானசம்பந்தர் அருளிய 383 பதிகங்கள் (4147 பாடல்கள் கொண்டவை), முதல் மூன்று திருமுறைகளாகவும், அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அருளிய 312 பதிகங்கள் (3065 பாடல்கள் கொண்டவை) நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் திருமுறைகளாகவும், சுந்தரர் அருளிய 100 பதிகங்கள் (1026 பாடல்கள் கொண்டவை) ஏழாம் திருமுறையாகவும், வகுக்கப்பட்டன.
பின்னர் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் (எட்டாம் திருமுறை), திருவிசைப்பா திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை) திருமந்திரம் (பத்தாம் திருமுறை), காரைக்கால் அம்மையார் போன்றோர் அருளிய பல வகையைச் சார்ந்த பாடல்கள் (பதினோராம் திருமுறை), பெரிய புராணம் (பன்னிரண்டாம் திருமுறை) என்று சேர்க்கப்பட்டு, இந்த சைவ இலக்கியங்கள் ‘பன்னிரு திருமுறை’ என்று பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றன.
கருத்தாழம் மிக்க தேவாரப் பாடல்களை, பொருள் உணர்ந்து அனைவரும் பாட வேண்டும் என்ற எண்ணத்தில், தினம் ஒரு தேவாரப் பதிகம் என்ற இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடல்களின் எளிய பொருள்கள், தேவையான இடங்களில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு, தினமும் ஒரு தேவாரப் பாடலாக வெளியிடப்படுகிறது.
தினமும் ஒரு தேவாரம், தினம் ஒரு திருவாசகம், மற்றும் தினம் ஒரு திருப்புகழ் வீதம் என்னால் முயன்றவாறு தொகுத்து வழங்கப்படுகிறது
ஆன்மீக அன்பர்கள் தினமும் அந்த இறைவனை நினைக்க இது மூலம் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமென எண்ணுகிறேன். தினமும் அவன் புகழை நினைக்க, படிக்க,
அருளாளர்கள் கூற்றிற்கிணங்க வணங்க வழி கிடைக்கு மென எண்ணுகிறேன்.
திருச்சிற்றம்பலம்