அதிமுக பொருளாளர் ஆகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்
அதிமுக பொதுச்செயலாளராக நேற்று வி.கே.சசிகலா தேர்வு பெற்றதை அடுத்து அதிமுக பொருளாளராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வர அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சசிகலாவை எதிர்க்கும் மனநிலையில் இருப்பவர்களுக்கு ஒருசில முக்கிய பதவிகள் கொடுத்து சமாதானம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து வரும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு, பொருளாளர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் செங்கோட்டையன், கேபி முனுசாமி ஆகிய முக்கிய தலைவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்டில் கட்சியின் அமைப்பு பதவிகளில் சசிகலா தனது குடும்பத்தினரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வரும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.