பாபநாசம்’ திரைவிமர்சனம்
மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் நன்றாக ஓடிய ஒரு மாபெரும் சூப்பர் ஹிட் திரைப்படம். இந்த திரைப்படத்தின் கதை, முக்கியமாக கிளைமாக்ஸ் டுவிஸ்ட் ஆகியவற்றை படம் பார்த்த அனைவரும் தெரிந்திருப்பார்கள். எனவே இதை தமிழில் ரீமேக் செய்யும்போது மலையாளத்தில் கொடுத்த அதே காட்சியமைப்புகளின்படி கதையை கொண்டு செல்லாமல் தமிழில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசத்தை ‘பாபநாசம்’ படக்குழுவினர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் த்ரிஷ்யம் படத்தை அப்படியே ஈயடிச்சான் காப்பி மாதிரி அதே மாதிரியே எடுத்துள்ளதால் த்ரிஷ்யம் படம் பார்த்தவர்களுக்கு மட்டும் இந்த படம் பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும் படமாகவும், பார்க்காதவர்களுக்கு பிரமாண்டமான படமாகவும் இருக்கின்றது.
கேபிள் டிவி நடத்தும் கமலுக்கு கவுதமி என்ற மனைவியும் நிவேதா, எஸ்தர் அனில் ஆகிய இரண்டு பெண்குழந்தைகளும் உள்ளனர். சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி குடும்பத்தை காப்பாற்றும் கமலுக்கு குடும்பம்தான் எல்லாமும். குடும்பத்திற்காக எதையும் செய்யத்தயாராக இருக்கும் ஒரு கேரக்டர். இந்நிலையில் பள்ளி கேம்ப் ஒன்றுக்கு சென்ற கமல் மகள் நிவேதாவை ஐ.ஜி. மகன் வருண், குளிக்கும்போது வீடியோ எடுத்து அந்த வீடியோவை காட்டி தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டுகிறார். கவுதமியும், நிவேதாவும் எவ்வளவோ கெஞ்சியும் மசியாத வருணை ஒரு கட்டத்தில் நிவேதா கொலை செய்யும்படி நேருகின்றது. உடனே பதட்டம் அடையும் கவுதமி, நிவேதா பிணத்தை தங்கள் வீட்டு தோட்டத்திலேயே புதைத்துவிட்டு கமல் வந்தவுடன் நடந்ததை கூறுகின்றனர்.
ஐ.ஜி. மகன் காணாமல் போனதால் போலீஸ் டிபார்ட்மெண்டே சுறுசுறுப்பாகிறது. ஒருவழியாக கமல் குடும்பத்தினர்களை மோப்பம் பிடித்து போலீஸ் நெருங்கிவிட்டாலும், வருண் காணாமல் போனதற்கு கமல் குடும்பம்தான் காரணம் என்பதை நிரூபிக்க ஒரு ஆதாரம் கூட சிக்கவில்லை. இந்நிலையில் போலீஸ் சித்திரவதை தாங்க முடியாமல் கமலின் இளையமகள் உண்மையை கூறிவிட அதன்பின்னர் நேரும் திடுக்கிடும் திருப்பம்தான் கதையின் முடிவு.
உலக நாயகன் தன் பெயருக்கேற்றவாறு மிகச்சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதியில் ரொமான்ஸ், டீக்கடை அரட்டை என ஜாலியாக நடிக்கும் கமல், இரண்டாம் பாதியில் வெளுத்து கட்டுகிறார். மோகன்லால் நடிப்பின் சாயல் எந்த இடத்திலும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். நெல்லைத்தமிழை திருநெல்வேலிக்காரர்களே ஆச்சரியப்படும்படி பேசியிருக்கின்றார். இருப்பினும் ஒருசில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்சன் தென்படுகிறது.
கவுதமி இந்த கேரக்டருக்கு பொருத்தம்தானா என்பதை இயக்குனர் இன்னுமொரு யோசித்திருக்கலாம். நடிப்பில் குறை வைக்கவில்லை என்றாலும், மீனாவிடம் இருந்த எக்ஸ்பிரஷன் கவுதமியிடம் மிஸ்ஸிங்.
கமலின் இரண்டு குழந்தைகள், கலாபவன் மணி, டெல்லி கணேஷ், சார்லி, வைத்தி, ஆஷா சரத் ஆகியோர் தங்களுடைய கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர். ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்களுமே மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் அசத்தியுள்ளார்.
இயக்குனர் ஜீத்து ஜோசப், ஜார்ஜ்குட்டியை சுயம்புலிங்கம் என்று பெயரை மாற்றிவிட்டால் மட்டும் போதுமா? காட்சி அமைப்புகளில் இன்னும் பல வித்தியாசங்களை தமிழில் கொண்டு வந்திருக்கலாம். முதல் அரைமணி நேரம் கொஞ்சம் போரடிக்கின்றது. எடிட்டர் அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவு ஓகே ரகம்.
மொத்தத்தில் த்ரிஷயம் படம் பார்த்தவர்களுக்கு பாவம், பார்க்காதவர்களுக்கு பரவசம்.