நிறைவு பெற்றது பாராஒலிம்பிக் போட்டி., சீனா முதலிடம். இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
கடந்த சில நாட்களாக ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கான 15-வது பாரா ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் 107 தங்கம், 81 வெள்ளி, 51 வெண்கலம் பதக்கங்கள் பெற்று சீனா முதலிடம் பெற்றுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான 15-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. 159 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். முதல் நாளில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சீன வீரர்கள் மொத்தம் 239 பதக்கங்கள் பெற்றனர். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து 64 தங்கம் உள்பட 147 பதக்கங்கள் பெற்றுள்ளது. உக்ரைன் (41 தங்கம் உள்பட 117 பதக்கம்), 3-வது இடமும், அமெரிக்கா 4-வது இடமும் (40 தங்கம் உள்பட 115 பதக்கம்) பெற்றன.
இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 4 பதக்கத்துடன் 43-வது இடத்தை பிடித்தது. இந்தியா தரப்பில் தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜாஜாரியா ஆகியோர் தங்கப்பதக்கமும், குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக் வெள்ளிப்பதக்கமும், உயரம் தாண்டுதல் வீரர் வருண் சிங் வெண்கலமும் வென்று பெருமை சேர்த்தனர்.