ஆட்டிச பாதிப்பு என்பது வரையறுக்கப்பட முடியாதது. எனவே, எந்தக் கட்டத்திலும் இதற்கு மேல் நம் குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். வாழ்நாளின் ஏதேனும் ஒரு கணத்தில் அக்குழந்தைகள் எதையேனும் சாதிக்க முடியும். எனவே, மனதைத் தளர விடாமல் தொடர்ந்து கற்க அவர்களை ஊக்குவியுங்கள். பல்வேறு வாய்ப்புகளை அவர்களுக்குத் தொடர்ந்து அளியுங்கள்.
இசை, நடனம், ஓவியம், புதிர்களை அடுக்குதல், ஸ்கேட்டிங் என எல்லா வகை வகுப்புகளையும் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்துங்கள். அக்குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் ஏதேனும் ஒரு திறனை நீங்கள் அறிய நேரிடலாம். அது குழந்தையின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம். குழந்தைக்கு ஆட்டிசம் என்ற விஷயத்தைக் கேட்ட உடனேயே உங்கள் மனதை பயம் கவ்வக்கூடும்.
இந்தக் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? நண்பர்கள் இருப்பார்களா? முதலில் பேச முடியுமா என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எழும்பும். உங்கள் குழந்தையைப் பற்றிய கனவுகள் நொறுங்கும். இப்படியெல்லாம் குமுறுவதில் தவறேயில்லை. ஆனால், அதற்கு ஒரு கால வரையறை வைத்துக் கொள்வது நல்லது.
உங்கள் ஆற்றலை வீணடிக்காது, விரைவில் உங்கள் குழந்தையை வாழ்வதற்குத் தயார் செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் அவமானகரமான விஷயம் எதுவும் இல்லை. நம் குழந்தை எதையெல்லாம் செய்யவில்லை என்று யோசித்து சோர்வுறாமல், குழந்தையின் சின்னச் சின்ன செயல்களையும் வெற்றியையும்கூட கொண்டாடப் பழகுங்கள்.