பசங்க-2 திரைவிமர்சனம். இதுவொரு படமல்ல…மிகச்சிறந்த பாடம்
ஒரு குழந்தை புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டால் அதிகபிரசங்கி என்று ஒதுக்கிவிடாமல் குழந்தையின் புத்திசாலித்தனைத்தை போற்ற வேண்டும் என்று உயர்ந்த கருத்தை கூறுவதற்காக பாண்டியராஜ் செய்த ஒரு வருட ரிசர்ச்தான் இந்த படம். இந்த படம் கண்டிப்பாக குழந்தைகளுக்கான படம் இல்லை. ஒவ்வொரு பெற்றொரும், ஆசிரியரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
கார்த்திக் குமார்-பிந்துமாதவியின் நயினா என்ற பெண் குழந்தை, ராம்தாஸ்-வித்யாபிரதீப்பின் கவின் என்ற ஆண் குழந்தை ஆகிய இருவரும் அதிகப்படியான புத்திசாலித்தனத்துடன் கூடிய குழந்தைகளாக இருப்பதால் இருவரின் பெற்றோர்களுக்கும் ஏகப்பட்ட பிரச்சனை. வருடத்திற்கு ஒரு பள்ளி என மாறி மாறி அனைத்து பள்ளிகளாலும் ஒதுக்கப்படுகின்றனர். இந்நிலையில் வெவ்வேறு இடங்களில் வளரும் இந்த குழந்தைகள் ஒரு கட்டத்தில் ஒரே பள்ளியில் படித்து, ஒரே அபார்ட்மெண்டில் குடிவருகின்றனர். இருவரும் ஒரே மாதிரியான குழந்தைகள் என்பதால் எளிதில் இருவரும் நண்பர்களாகிவிடுகின்றனர்.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் இரண்டு குழந்தைகளின் சேட்டைகளை தாங்க முடியாமல் இருவரையும் ஹாஸ்டலில் அவர்களுடைய பெற்றோர்கள் சேர்த்துவிடுகின்றனர். பெற்றோர்களை பிரிந்து வாடும் குழந்தைகள் ஹாஸ்டலிலும் தங்கள் சேட்டையை தொடர்வதால், ஹாஸ்டலில் இருந்தும் விரட்டப்படுகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் நல மருத்துவர் சூர்யா மற்றும் ஆசிரியை அமலாபால் ஆகியோர்களை இரு பெற்றோர்களும் சந்திக்கின்றனர். தங்கள் குழந்தைகளின் பிரச்சனையை தீர்க்க உதவுமாறு அவர்கள் சூர்யாவிடம் வேண்டுகோள் வைக்க, அதற்கு சூர்யா எடுக்கும் முடிவுதான் படத்தின் மீதிக்கதை.
சூர்யா, குழந்தைகளோடு குழந்தையாக மாறி சிகிச்சை செய்யும்போதும், குழந்தைகளை மரியாதையாக அழைத்து, அவர்களுடைய திறமைக்கு மதிப்பு கொடுத்து அவர்களை வளர்க்கும் திறனும் அனைவரையும் நிச்சயம் கவரும். குழந்தைகளை மதிப்பெண் எடுக்க வைப்பதைவிட மதிப்புமிகுந்தவர்களாக வளர்க்க வேண்டும் என்ற உன்னதமான கருத்தை சூர்யா கேரக்டர் தெளிவாக விளக்கியுள்ளது.
ஆசிரியையாக வரும் அமலாபால், மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியூள்ளார். பாடங்களை சொல்லி கொடுப்பது மட்டும் ஒரு ஆசிரியரின் வேலை இல்லை. குழந்தைகளுக்கு எந்த தனித்திறமை இருக்கின்றது என்பதை கண்டுபிடித்து அவர்களுடைய திறமையை வளர்ப்பதே ஒரு ஆசிரியையின் கடமை என்பதை அழகாக சொல்லியுள்ளார்.
கவின் நயினா என்ற இரண்டு குழந்தை கேரக்டர்களாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்களின் நடிப்பு மிக அருமை. இவர்களை திறமையாக வேலை வாங்கிய இயக்குனர் பாண்டியராஜூக்குத்தான் இந்த பெருமை என்பது உண்மை
குழந்தைகளின் பெற்றோர்களாக வரும் கார்த்திக் குமார்-பிந்துமாதவி, ராம்தாஸ்-வித்யாபிரதீப் நடிப்பு ஓகே ரகம். இசை அரோல் கரோலி. பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை மிக அருமையாக உள்ளது.
குழந்தைப் பருவம் என்பது அப்பாவுடனும் அம்மாவுடனும் விளையாட்டிலும் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டிய ஒரு பொற்காலம். ஆனால் இப்போதைய குழந்தைகளை அறைக்குள்ளேயே அடைத்து வைக்கப்படுவதால் அவர்கள் மனநிலை மாறுகிறது. இந்த மிகப்பெரிய உண்மையை ஒரு இரண்டு மணி நேர படத்தில் மனதில் படியும்படியான காட்சிகளுடன் இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தை ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பாடமாக வைக்க வேண்டும். அந்த அளவுக்கு படத்தின் ஆழம் உள்ளது. குழந்தைகள் மட்டுமின்றி, பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம்.
மொத்தத்தில் ‘பசங்க -2’ பள்ளிகளில் வைக்க வேண்டிய பாடம்.