கோரிக்கையை ஏற்காவிட்டால் மதம் மாறி விடுவோம். குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் மிரட்டல்
குஜராத் மாநிலத்தில் 22 வயது இளைஞரான ஹர்திக் படேல் தலைமையில் பட்டேல் சமூகத்தினர்களை முற்பட்ட வகுப்பில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இந்நிலையில் குஜராஜ் முதல்வர் ஆனந்திபென் படேல் சமூகத்தினர்களின் கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகள் உட்பட ரூ1,000 கோடி நிதி உதவித் திட்டங்களை அதிரடியாக அறிவித்ததோடு, அரசுப் பணிகளில் சேருவதற்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தவும் உத்தரவு பிறப்பித்தார். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவர்களுக்கு அளிக்கப்படுவது போல இதர முற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி நிதி உதவி வழங்கப்படும் இதற்கு ரூ1,000 கோடி ஒதுக்கீடு செய்து, படேல் சமூகத்தினர் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். என்றும் முதல்வர் ஆனந்தி பென் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இந்த அறிவிப்புகளை எல்லாம் நிராகரித்த படேல் போராட்ட குழு தலைவர் ஹர்திக் படேல், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக லாலிபாப் மிட்டாயைத்தான் ஆனந்திபென் தலைமையிலான குஜராத் அரசு தருகிறது என்று விமர்சித்தார்.
இந்நிலையில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறிவிடுவோம் என்று சூரத்தில் உள்ள 500 குடும்பங்கள் குஜராத் அரசிற்கு நேற்று மிரட்டல் விடுத்துள்ளன.
இது குறித்து சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த அகில் பாரதீய படிதார் சேனா என்ற அமைப்பின் உறுப்பினர் ராஜூ போதரா கூறுகையில், “பசோதரா கிராமத்தில் உள்ள சுமார் 500 குடும்பங்கள் தங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்த அரசுக்கு எதிரான அடையாளப் போராட்டமாக இந்து மதத்தை விட்டு வெளியேறி, வேறு மதத்திற்கு மாற உள்ளனர்.” என்றார்.
பசோதரா கிராமவாசியான விஜய் என்பவர், அரசு படேல் சமூகத்தினர் மீது பல்வேறு வகைகளில் தாக்குதல் நடத்துகிறது. எங்களுக்கு மதம் மாறுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறுகிறார். படேல் சமூகத்தினரில் இத்தகைய போராட்டங்கள் சமூக நீதிக்கு எதிரானவை என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் மதம் மாறிவிடுவதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary: Patels in Surat threaten to convert for reservation