ஒரு வீடு அல்லது வீட்டுமனை வாங்குவது என்ற கனவை நனவாக்குவது மிகவும் எளிதுதான். அதற்கு முதலில் சரியான திட்டமிடல் வேண்டும். அதன் பிறகு நிறைய இடங்களைச் சென்று பார்க்க வேண்டும். இதில் எங்கேயும் அலுப்போ தயக்கமோ கூடாது.
இதை எனது அனுபவத்தில் இருந்து சொன்னால் உங்களுக்கு எளிதாகப் புரியும். நானும் சென்னைக்கு வந்த புதிதில் சொந்த வீடு அல்லது வீட்டு மனை பற்றிக் கொஞ்சமும் நினைத்துப் பார்த்ததில்லைதான். ஆனால் நாளாக நாளாகச் சொந்தமாக வீடு அல்லது வீட்டுமனை வாங்குவது பற்றிய கனவு என் நெஞ்சிலும் பூக்க ஆரம்பித்தது. முதலில் நம்மாலும் ஒரு வீட்டுமனையை வாங்கிட முடியுமா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதன் பின் ஏன் முடியாது? என்று தன்னம்பிகையுடன் ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்தேன். நேரமும் சூழ்நிலையும் ஒத்துழைத்தது.
மனைத் தேர்வு
முதலில் நமக்கான மனையைத் தேர்வு செய்ய வேண்டுமே! அதற்காக நண்பர்களுடன் பல இடங்களுக்குச் சென்று பலவிதமான வீட்டுமனைகளைப் பார்த்து வந்தோம். பார்த்துப் பார்த்து ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாங்கினேன். என்னுடன் நண்பர்கள் பத்துப்பேரும் சேர்ந்து வாங்கினார்கள். பத்திரப் பதிவும் இனிதே நடந்து முடிந்தது.
நாங்கள் இப்போது ஒரு குழுவாக உருவாகிவிட்டோம். வீட்டுமனை வாங்குவது என்றால் வெறும் பத்திரப் பதிவோடு முடிந்து விட்டதா என்ன? அதற்கான பட்டா பெற வேண்டுமே! அடுத்த சில மாதங்கள் சென்றதும் நாங்கள் வாங்கிய வீட்டுமனைக்கான பட்டா பெறுவதற்காக விண்ணப்பித்தோம். அதற்கான கிராம நிர்வாக அதிகாரியைச் சந்தித்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து அவரிடம் ஒப்படைத்தோம். உடன் அதற்கான ஒப்புகைச் சீட்டினையும் பெற்றுக் கொண்டோம்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டதால் அதனைப் பெற்றுக்கொண்ட நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றோம். அந்த ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டிருந்த நான்காவது வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது. அதில் குறிப்பிட்டிருந்தபடி அனைத்து ஆவணங்களுடன் சென்றோம். அன்றே எங்கள் அனைவருக்கும் பட்டா கிடைத்துவிடும் என்று நினைத்திருந்தோம்.
கடைசியில் எங்கள் அனைவருக்கும் பெருத்த அளவில் ஏமாற்றமே கிடைத்தது. அன்று மட்டுமல்ல அதற்கு அடுத்தடுத்த வாரங்களிலும் திருப்பி அனுப்பப்பட்டோம். நம்பிக்கையும் கொஞ்சங்கொஞ்சமாக நழுவிக் கொண்டிருந்தது.
அரசு அலுவலர்களின் அஜாக்கிரதை
இப்படியாக வருடக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டோம். இதற்காக சர்வேயரையோ அல்லது மற்ற அலுவலர்களையோ நான் குற்றம் குறை சொல்லப் போவதில்லை. அவர்களுக்கும் அவ்வளவு வேலைப் பளு. அவர்கள் என்னதான் செய்ய முடியும். ( ஆனால் வேலைக்கு வருவதென்னவோ பத்தரை அல்லது பதினொண்ணுக்குத்தான்)
வெளியிலும் நிலங்களை அளந்து குடுத்துவிட்டு வர வேண்டுமல்லவா?
நாங்களும் அலைந்து அலைந்து என் நண்பர்கள் எல்லோரும் நம்பிக்கையைச் சுத்தமாக இழந்து விட்டார்கள். அவர்கள் முறையான வழியில் போனால் பட்டா கிடைக்காது என இடைத்தரகர்களை அணுக ஆரம்பித்தார்கள். அல்லது இடைத்தரகர்கள் அவர்களை நாடி வந்தார்கள் எனச் சொல்லலாம். ஆனால் நான் மட்டும் நம்பிக்கையோடு இருந்தேன். என் நண்பர்கள் நினைத்ததுபோல இடைத்தரகர்களில் பட்டா ஒன்றுக்கு ரூபாய் பத்தாயிரம் வரைக்கும் கொடுத்து தங்களுக்கான பட்டாக்களை வாங்கிவிட்டார்கள். என்ன ஆனாலும் சரி என்று நானும் காத்திருந்தேன். ஒன்றும் நடக்கவில்லை.
வட்டாட்சியரைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்தேன். அவரும் நடவடிக்கை எடுக்கக் கோரி எழுத்துப் பூர்வமாக உத்தரவிட்டார். அப்படியும் காரியம் ஆகவில்லை. “உங்க பத்திரத்துல ஒரு டாக்குமெண்ட் இல்ல. நீங்க யாருகிட்ட நிலம் வாங்கினீங்களோ அவங்களையே கேட்டு வாங்கிட்டு வாங்க” என்றார் சர்வேயர். பத்திரப் பதிவு அலுவலகத்திலேயே அனைத்துப் பக்கங்களும் வரிசை எண் போடப்பட்டுத்தான் பதிவுசெய்யப் பட்டிருந்தது. இதில் எந்தப் பக்கத்தைக் கேட்டாரோ தெரியவில்லை.
நானும் பொறுமையாக ஏகப்பட்ட அலைச்சல்களுடன் காத்திருந்தேன். சாமானியர்களால் அப்படிப் பொறுமை காத்திடவோ கண்ட நேரத்திற்கும் அலைந்திருக்கவோ முடியாதுதான். இறுதியில் அதிர்ஷ்ட தேவதை அழைத்தாள். ஆம் எனக்கும் பட்டா கிடைத்துவிட்டது. அது சும்மா கிடைத்ததல்ல. அதன் பின்னே என் உழைப்பு (பொறுமை+அலைச்சல்) இருக்கிறது. இந்தப் பொறுமையும் அலைச்சலும் பலருக்கு இருப்பதில்லை. அரசு அலுவலகங்களில் காரியம் சாதிக்க இது அவசியம். இதில் மற்றவரைக் குற்றம் சொல்ல அந்தப் பலருக்கும் தகுதியில்லை.
நிகழ்ந்த பேரற்புதம்
பட்டாதான் கிடைத்துவிட்டதே என்று இருந்துவிட முடியாது, இருந்துவிடக் கூடாது. அதன் பின் சிட்டா, அடங்கல் என்ற ஒரு விஷயமும் இருக்கிறது. அவற்றை நமது மனை அமைந்துள்ள ஏரியாவின் கிராம நிர்வாக அலுவலரிடமே (VAO) வாங்கிவிடலாம். அதற்கு அனைத்து விதமான அசல் ஆவணங்களோடும் நாம் அவரை நாடிச் செல்ல வேண்டும்.
நானும் அப்படித்தான் சென்றேன். இதற்கு இனி எத்தனை மாதங்கள் அலைய வேண்டுமே என நினைத்துக் கொண்டு ‘நெஞ்சில் பேருறுதி கொண்டு’ சென்றேன். அங்கு எனக்குப் புதுவிதமான அனுபவம் ஏற்பட்டது. அந்த அலுவலர், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார். சொன்னேன். அசல் ஆவணங்களை வாங்கிப் பார்த்தவர் சரசரவென சிட்டா, அடங்கலை உடனே போட்டுக் கொடுத்துவிட்டார். இது அவரைப் பொறுத்தவரை ஒரு சாதாரண காரியமாகத் தெரிந்தாலும் எனக்குப் பேரற்புதமாகத் தெரிந்தது. இம்மாதிரியான அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய அலுவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என அவரை மனதுக்குள் பாராட்டிவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பினேன்.