தேனுபுரீஸ்வரர் கோவில்
கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஈஸ்வரனை காமதேனுவின் மகள் பட்டி வழிபட்டதால் இவ்வூர் பட்டீஸ்வரம் என்று அழைக்கப் படுகிறது. இங்குள்ள துர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கடந்த 1999-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தநிலையில் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களால் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.1½ கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்ய கடந்த 2010-ம் ஆண்டு பாலாலயம் நடைபெற்றது.
கும்பாபிஷேக பணிகள்
அதன்படி ரூ.24 லட்சத்தில் கிழக்கு ராஜகோபுரம், தலா ரூ.10 லட்சத்தில் தெற்கு, மேற்கு, வடக்கு கோபுரங்கள், ரூ.13 லட்சத்தில் அங்கபிரதட்சண மண்டபம் ஆகியவற்றுக்கு திருப்பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவறும் நிலையில் உள்ளன. மேலும் துர்க்கை அம்மன், நந்தீஸ்வரர், சுப்பிரமணியர், வன்னிமரத்து விநாயகர், தட்சிணாமூர்த்தி ஆகிய விமானங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட விமான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து வருகிற 29-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் 6 கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதற்காக பல லட்சம் மதிப்பில் யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. யாகசாலை பூஜைகள் முடிவடைந்தவுடன் வருகிற 29-ந் தேதி(வெள்ளிக்கிழமை) புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர் அன்று காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.