பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரகுப்தன் ஆலயம்

Kanchi-Sri-Chitragupta-Swamy-Temple7

உலகில் வாழும் ஜீவராசிகளின் கணக்கு வழக்குகளைத் துல்லியமாகக் கவனித்துப் பாவ புண்ணியக் கணக்கெழுதி, அதற்குரிய பலனுக்குப் பரிந்துரைப்பவர் சித்திரகுப்தன் ஆவார். பணபலமோ, ஆள் பலமோ, அரசியல் அழுத்தமோ ஏதுமின்றித் தன் கடமையைச் செவ்வனே செய்து வருபவர் இவர். எம தர்மராஜனின் உதவியாளரான இவர், நேர்மையான முறையில் தன் கடமையைச் செய்து வருகிறார். இந்தியாவில் கடம்பூர், கோடங்கிப்பட்டி உள்ளிட்ட 14 இடங்களில் சித்திரகுப்தனுக்குக் கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு பெற்று தனிக்கோவிலாக விளங்குவது, காஞ்சீபுரம் சித்திரகுப்தன் ஆலயம் ஆகும்.

சென்னிச்சோழன் அமைச்சராக இருந்த கனகராயன் என்பவன் சித்திரகுப்தனுக்கு ஆலயம் எழுப்பியதை வரலாறு எடுத்துக் கூறுகிறது. மூன்று நிலைகள் கொண்ட புதிய ராஜகோபுரம் நம்மை வரவேற்க, நேர் எதிரே மூலவராக சித்திரகுப்தன் எளிய வடிவில் அமர்ந்த கோலத்தில் அருள் வழங்குகின்றார். தன் வலது கரத்தில் எழுத்தாணியும், இடது கரத்தில் ஏடும் தாங்கி, தென்முகமாய்க் காட்சியளிக்கின்றார். இவரைத் தரிசிக்கும் போதே, நமது வினைகள் அனைத்தும் நம் கண் முன்னே நிழலாடுகின்றன. நாம் இப்பூவுலகை விட்டு அகலும் முன்பு வரை நம் வாழ்வில் புரிந்த அத்துணை பாவ, புண்ணியங்களையும் இவர் தன் பதிவேட்டில் எழுதி வருவது நம் நினைவிற்கு வருகிறது.

ஒரு செயலைத் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பாவக் கணக்கிலும், புண்ணியக் கணக்கிலும் பிரித்தெழுதும் இவரின் கடமையை நினைத்து நம் சிந்தனை செல்கின்றது. இதனால் சிறு தவறு கூட தவறியும் செய்து விடக்கூடாது என்ற எண்ணமே நம்மிடம் மேலோங்கி நிற்கிறது. கருவறையின் வலதுபுறம் வடலூர் ராமலிங்க சுவாமிகளின் சன்னிதி, அதனருகே சித்திரகுப்தன், அவரது துணைவியார் கர்ணீகை அம்பாள் ஆகிய உற்சவ திருமேனிகள் எழிலுடன் காட்சி தருகின்றன. ஐயப்பன் சன்னிதி வடக்கு முகமாய் அமைந்துள்ளது. அதன் எதிரில் துர்க்கை சன்னிதியும், அருகே நவக்கிரக சன்னிதியும் அமைந்துள்ளன. ஆலயத்தின் பின்புறம், தீப மண்டபம் அமைந்துள்ளது.

தமிழ்ப்புத்தாண்டு தொடங்கும் சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தன்று மாலை சித்திரகுப்தனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இதற்கு மறுநாள் சித்திரகுப்தன் அவதரித்த நாளான சித்ராப் பவுர்ணமியன்று சித்திரகுப்தனுக்கு பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு அதிதேவதையாக சித்திரகுப்தன் போற்றப்படுகின்றார். கேது தோஷம் உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் வந்து அர்ச்சனை செய்து கொள்வது சிறப்பு. என்றாலும், பிறந்த கிழமை, பிறந்த நட்சத்திரம் கூடும் நன்னாளில் வந்து அர்ச்சனை செய்து வழிபடுவது கூடுதல் சிறப்பைத் தரும். நீல மலர்கள், பலவண்ண ஆடை சித்திரகுப்தனுக்கு உகந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாலயம் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.

காஞ்சீபுரம் பேருந்து நிலையத்தின் வெகு அருகில், நெல்லுக்காரன் தெருவில் தெற்கு முகமாக சுமார் 6000 சதுர அடியில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

Leave a Reply