‘கண்ணீர் அஞ்சலி’ விளம்பரத்தால் கலக்கம் அடைந்துள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள்
மக்களின் கருத்துக்கு எதிராக சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்த எம்.எல்.ஏக்கள் தங்கள் சொந்த தொகுதிக்கு செல்ல முடியாமல் கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு அதிமுகவினர் எடப்பாடியாருக்கு ஆதரவு கொடுத்த எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வேலுார் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான நிலோபர் கபிலுக்கு எதிரான துண்டு பிரசுரத்தை நேற்று சிலர் கொடுத்துள்ளனர். அதில் ‘கண்ணீர் அஞ்சலி… திருமதி நிலோபர் கபில், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, வேலைக்காரியின் வேலைக்காரனுக்கு ஆதரவாக வாக்களித்ததால், தொகுதி மக்கள் சார்பாக, அரசியல் வாழ்வில் அகால மரணம் அடைந்து விட்டதை, கோபத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இனி, இவர் தொகுதி பக்கம் வந்தால், செருப்பு மற்றும் துடைப்பம் மூலம் தக்க பாடம் கற்பிக்கப்படும். இப்படிக்கு, வாணியம்பாடி தொகுதி, மானம் உள்ள தமிழ் மக்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் மதுரையில் செல்லூர் ராஜூவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதேபோல் கடலூர் மாவட்ட அமைச்சர் சம்பத், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, விருத்தாசலம் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கலைச்செல்வன் ஆகியோர்களுக்கு எதிராகவும் அந்தந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஒருசில இடத்தில் எம்.எல்.ஏக்கள் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்த 11
எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.