ரத்தக் கொதிப்பு என்பது அதிக ரத்த அழுத்தத்தினால் ஏற்படுவது. இது ஏற்படுவதற்கான காரணங்களை துல்லியமாக கூறமுடியாது. அது பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் என, பரம்பரை பரம்பரையாக தொடர்வதாகும்.
பொதுவாக இவை தொடர் மனஅழுத்தத்தின் காரணமாகவும், ஓய்வில்லாத கடுமையான உழைப்பு, அதிக அளவு கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களின் மூலமும் மற்றும் இறைச்சி, தேயிலை, புகையிலை மற்றும் போதை பொருட்களின் மூலமாகவும் உண்டாகிறது. ரத்த அழுத்தம் ஒரே நாளில் ஏற்படுவதில்லை.
நீண்ட காலங்கள் உள்ளூற இருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். நம்முடைய ரத்த அழுத்தம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ப மாறும். துயரம், அதிக அளவிலான மகிழ்ச்சி, அச்சம் மற்றும் கட்டுக்கடங்காத உணர்ச்சிகள் மூலமாக ரத்த அழுத்தமானது, 30 முதல் 60 எண்கள் வரை உயரும். நாம் உறங்கும் போது உள்ளதை விட, நடக்கும் போதும் அதைவிட ஓடும் போதும், ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும்.
ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை :
ரத்த கொதிப்புள்ளவர்கள் அதிக நேரம் ஓய்வின்றி கண்விழித்தல் கூடாது. உணர்ச்சிகளை தூண்டக்கூடிய சினிமா அல்லது செயல்களை தவிர்க்க வேண்டும். அதிகளவு கோபத்தை காட்டக்கூடாது. காபி, டீ, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். புகையிலை சம்மந்தமான எதையும் பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக, மது அருந்தக்கூடாது. ரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ அதிக அளவு உணர்ச்சிகளை காட்டக்கூடாது. இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்க வேண்டும்.