ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியபோது”சிறையில் இருப்பவர்களின் உதவி எங்களுக்கு தேவையில்லை. அதை நாங்கள் விரும்பவும் இல்லை” என்று பேசியதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 15ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. அம்மாநிலத்தின் ஹிசார் என்ற பகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்த ஹரியானா வீரர்களை மனதார பாராட்டுகிறேன். மத்தியில் எங்கள் அரசு மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.
சிலர் சிறையில் இருந்தபடியே அரசை நடத்தி விடலாம் என வீண்கனவு காண்கின்றனர். ஹரியானா மாநில வாக்காளர்கள் அப்படியானவர்களுக்காக வாக்களிப்பார்களா? தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் ஆதரவு எங்களுக்கு சிறிதும் தேவையில்லை. கல்வியறிவு, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவிலேயே பின் தங்கிய மாநிலங்களில் முதல் மாநிலமாக இருக்கிறது ஹரியானா. இதுவரையிலான ஹரியானா அரசுகளால் இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. நீங்கள் மாற்றத்தை விரும்பினால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.
ஹரியானாவின் இந்திய தேசிய லோக்தள் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஊழல் வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். சவுதாலவின் லோக் தள் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என்பதைக் குறிப்பிடும் வகையில் இவ்வாறு மோடி பேசினாரா அல்லது தமிழக முதல்வரை மறைமுகமாக தாக்குவதற்காக பேசினாரா? என்பது குறித்து பெரும் விவாதம் நடந்து வருகிறது. இதனால் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.