தொகுதிக்கு வந்த எம்.எல்.ஏவை கயிற்றால் கட்டி வைத்த கிராம மக்கள். உ.பி.யில் பரபரப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் பொதுமக்கள் குறைகளை கேட்க வந்த எம்.எல்.ஏவை அந்த தொகுதி மக்கள் கயிற்றால் கட்டி வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சந்தவ்லி மாவாட்டத்தில் உள்ள முகல் சராய் பகுதி மக்கள் தொடர் மின்வெட்டு மற்றும் குடிதண்ணீர் பிரச்சனையால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பலமுறை அந்த தொகுதி எம்.எல்.ஏ மற்றும் கவுன்சிலர்களிடம் கோரிக்கை விடுத்தும், அவர்களுடைய கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தொகுதி மக்களிடம் குறை கேட்க வந்த க்கள் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. பப்பான் சிங் செளவுகான் மற்றும் கவுன்சிலர் கயாமுதினை நேற்று சிறை பிடித்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் கயிற்றில் கட்டி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலரை விடுதலை செய்யும்படி கிராம மக்களிடம் சமாதானம் செய்தார். மேலும், விரைவில் உங்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று எம்.எல்.ஏ.வும் காவல்துறை அதிகாரிகளும் வாக்குறுதி அளித்ததை அடுத்து இருவரையும் கிராம மக்கள் விடுவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் மீது எம்.எல்.ஏ. புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் எந்த அரசியல்வாதியாவது தொகுதிப்பக்கம் வந்தால், அவர்களுக்கும் இதுதான் கதி என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.