இனிவரும் கூட்டங்களிலும் பாகிஸ்தான் கொடி ஏந்தி செல்லப்படும். கிலானியின் சர்ச்சைக்கருத்து

pakistanசமீபத்தில் காஷ்மீரில் நடந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் பொதுக் கூட்டங்களில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை அக்கட்சியின் தொண்டர்கள் ஏந்தி சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து இனிவரும் ஹூரியத் மாநாடுகளிலும் பாகிஸ்தான் கொடியை ஏந்திச் செல்வது தொடரும்” என அக்கட்சியின் தலைவர் சையது அலி ஷா கிலானி தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள கிலானி நேற்று தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, அவர் இதைத் தெரிவித்தார்.
 
இதுகுரித்து கிலானி மேலும் கூறியதாவது:  காஷ்மீரில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பாகிஸ்தான் தேசியக் கொடியுடன் கட்சித் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். அண்டை நாடான பாகிஸ்தான், நமது நலம் விரும்பி. எனவே, இறைவனின் விருப்பத்தின் பேரில், எதிர் காலத்தில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டங்களிலும் பாகிஸ்தானின் தேசியக் கொடி ஏந்தி தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கு தீங்கு நினைக்கவில்லை” என்று கூறினார். கிலானியின் இந்த பேச்சுக்கு மத்திய அரசு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

முன்னதாக, காஷ்மீரில் கடந்த மாதம் 15ஆம் தேதி, கிலானி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில், பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  இந்தச் சம்பவம் குறித்து மாநில அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததால், பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான மஸரத் ஆலம் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  அதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஹுரியத் கட்சியின் பொதுக் கூட்டங்களிலும் பாகிஸ்தான் தேசியக் கொடிகளுடன் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply