சென்னை பெரம்பூரில் இயங்கிவந்த பின்னி மில் மூடப்பட்டதால் அதில் திரைப்படப் படப்பிடிப்புகளும் ரியாலிட்டி ஷோக்களின் ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவந்தன. இந்த இடத்தை ரியல் எஸ்டேட்டுக்குப் பயன்படுத்த பின்னி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த இடத்தில் ஒரு பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட நகரியம் ஒன்று அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
71 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த நிலத்தில் சுமார் 5,000 முதல் 6,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நகரியம் அமைக்கப்பட உள்ளது. புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படும் மில் கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டியெழுப்பப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னி நிறுவனத்தின் செயல் தலைவர் நந்தகோபாலிடம் இது குறித்து கேட்டபோது, “ஆமாம். ஒரு நகரியம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அந்த நகரியத்தில் குடியிருப்புப் பகுதிகளும், வணிக வளாகங்களும் இடம்பெறும். இந்த வேலையை அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க உள்ளோம்” என்று கூறினார்.
புதிதாக உருவாக உள்ள இந்த நகரியத்தில் எண்பது சதவீத நிலத்தைக் குடியிருப்புப் பகுதி ஆக்கிரமித்துக்கொள்ளும் என்று எஞ்சியுள்ள இடத்தில் வணிக வளாகம் அமைக்கப்படும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டார். ஒரு பெரிய மாலும், மருத்துவ மனையும், பள்ளியும் இங்கு அமைக்கடலாம் என்றும் சிறிய அளவிலான கடைகளும் வரக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. இத்தகவலை பின்னி நிறுவனம் பம்பாய் பங்குச் சந்தைக்குத் தெரியப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்துக்குத் தேவையான ஒப்பந்தத்தைக் கட்டுமான நிறுவனத்துடன் மேற்கொண்டு, திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்புக்கு நந்தகோபாலையும், மேலாண்மை இயக்குநர் அர்விந்த் நந்தகோபாலையும் தேர்ந்தெடுத்துள்ள இயக்குநர்கள் குழு அதற்கு ஒப்புதலும் அளித்துவிட்டது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் தேவையான – எவ்வளவு நிதி தேவைப்படும், எப்படி வடிவமைக்கலாம், எந்தக் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் போன்ற – ஆரம்ப கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டுவருவதாக நந்தகோபால் தெரிவித்தார். இந்தப் பணியில் இந்தியாவின் இரண்டு முக்கிய கட்டுமான நிறுவனங்கள் ஆலோசிக்கப்படுவதாகவும் அதில் ஒன்றிடம் கட்டுமானப் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். இந்தத் திட்டம் முழுமையாகப் பூர்த்தியானால் சென்னையின் பெரிய நகரியமாக இது விளங்கும். ஏனெனில், அண்ணாநகரில் ஓசோன் குழுவினர் கட்டியுள்ள மெட்ரோசோன் என்னும் நகரியமே இப்போதைக்குச் சென்னையின் பெரிய நகரியம். இதன் பரப்பு 42 ஏக்கர். பின்னி நிறுவன வளாகத்தில் கட்டப்படப் போகும் நகரியத்தின் பரப்போ 71 ஏக்கர். எனவே அது கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அதுவே சென்னையின் மிகப் பெரிய நகரியமாக இருக்கும்.
பின்னி வளாகத்தின் இந்தக் கட்டுமானம் உயிர்பெற்று எழுந்தபின்னர் அங்கு நிலத்தின் மதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் ரியல் எஸ்டேட் துறை அங்கு எழுச்சி பெற ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. தற்போது இங்கு சதுர அடி 6,000 முதல் 7,000 வரை விலைபோகிறது. புதிய நகரியம் உருவான பின்னர் அங்கு நில மதிப்பு உயர்ந்து சதுர அடிக்கு 8,500 முதல் 9,000 வரை விலை போகலாம் என நம்பப்படுகிறது.
பின்னி நிறுவனம் இந்த இடத்தில் ஒரு பகுதியை அதாவது 14.16 ஏக்கரை 2013-ல் லேண்ட்மார்க் ஹவுஸிங் நிறுவனத்திற்கு 490 கோடி ரூபாய்க்கு விற்றது என்பது குறிப்பிடத்தக்கது.