25 ஆண்டுகளுக்கு பின் வெளியே வரும் ராஜீவ் காந்தி கொலைக் கைதி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆடுகளுக்கும் மேலாக பரோலில் வெளிவராமல் சிறையில் இருக்கும் பேரறிவாளன் முதல்முறையாக பரோலுக்கு விண்ணப்பித்துள்ளார். பேரறிவாளனின் தந்தை உடல்நலமின்றி இருப்பதால் அவரை பார்ப்பதற்காக அவர் பரோலுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதில் இருந்து ஒருமுறை கூட பரோலுக்கு பேரறிவாளன் விண்ணப்பிக்கவில்லை. குற்றமற்றவனாக நிரூபித்த பின்னர் நிரபராதியாகத்தான் வெளியே வருவேன் என பிடிவாதமாக இருந்த பேரறிவாளன், தனது தந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதை தாயார் அற்புதம்மாள் மூலம் கேள்விப்பட்டு தற்போது முதல்முறையாக பரோலுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவருக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் விரைவில் அவர் வெளியே வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “.வெளியே வந்தால் விடுதலையாகிதான் வெளியே வருவேன் என 25 வருடமா பிடிவாதமாக பரோல் செய்ய மறுத்து வந்தான். நாங்களும் விடுதலை இந்த ஆண்டு கிடைத்துவிடும், இப்போது கிடைக்கும், அப்போது கிடைக்கும் என பார்த்து பார்த்து பல ஆண்டுகள் கடந்துடுச்சு. அவனோட அப்பா, அறிவு இந்த வீட்டுக்கு எப்ப வருவான்னு காத்துக்கிட்டு இருக்கார். அதை நினைச்சியே மன அழுத்தம் அதிகமாகி உடல் நிலை மோசமாகிடுச்சி அவருக்கு.
அதனால் நாங்கதான் கட்டாயப்படுத்தி பரோலுக்கு விண்ணப்பிக்க வச்சோம். இவ்வளவு வருஷம் உறுதியா இருந்தான். அதை கெடுத்துட்டோமேன்னு வருத்தமாவும் இருக்கு. அவனை வீட்டுக்கு கூட்டி வந்து பார்க்கனும்னு ஒரு தாயா விருப்பமாவும் இருக்கு” என்று கூறினார்.