ஃபேஸ்புக் காதலால் ரூ.2 கோடியை இழந்த இளம்பெண்
உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் மூலம் ஏராளமான நன்மைகள் நடந்து வந்தபோதிலும், இதனால் ஒருசில தீமைகளும் நடந்து வருகின்றது. ஃபேஸ்புக் மூலம் காதல் வயப்பட்ட ஆஸ்திரேலிய பெண் ஒருவர் ரூ.2 கோடியை இழந்துள்ளதாக திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த ஒரு பெண் இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கேரி நியூகாம்பி கூறியதாவது: பெர்த் நகரைச் சேர்ந்த பெண், ஆலன் மெக்கர்ட்டி என்பவருடன் பேஸ்புக்கில் நண்பராகியுள்ளார். பின்னர் இது காதலாக மலர்ந்துள்ளது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தான், இப்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாக அந்தப் பெண்ணிடம் அவர் கூறியுள்ளார். மேலும் உள்அலங்கார தொழிலில் ஈடுபட்டுள்ள தனக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.
இதை நம்பும் வகையில் தனது பேஸ்புக் இணையதள பக்கத்துடன், allanmccarty.com and allanmccartydecor.com என்ற இணையதளங்களுக்கு லிங்க் கொடுத்துள்ளார். இதை நம்பிய அந்தப் பெண் ரூ.1.95 கோடி கொடுத்துள்ளார். பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள அந்த நபரை தொடர்புகொண்டபோது பலன் இல்லை. இதையடுத்து புகார் செய்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அப்படி ஒரு நபர் உண்மையிலேயே இல்லை என்றும் புகைப்படத்தில் உள்ள நபர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் இவரது பேஸ்புக்கிலிருந்து புகைப்படத்தை திருடி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்களது மோசடி வலையில் சிக்கி நியூ சவுத் வேல்ஸ் பெண் ஒருவரும், டாஸ்மானி யாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஏமாந்துள்ளதாக கூறப்படுகிறது.
English Summary: Perth woman loses Rs.2 Crore in online romance scam