ஜல்லிக்கட்டு அனுமதி, நாட்டுக்கு ஏற்பட்ட கருப்பு கறை. ‘பீட்டா’ அமைப்பு கருத்து
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது, நாட்டுக்கு ஏற்பட்ட கருப்பு கறை என்றும் இந்த கறையை துடைக்க சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என்றும் விலங்குகள் நல அமைப்பு ‘பீட்டா’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ‘பீட்டா’ அமைப்பின் இந்திய பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபூரா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விலங்குகள் வதை தடை செய்யப்பட்டுள்ளது. அந்த தடையை மத்திய அரசு நீக்கியிருப்பது நாட்டுக்கு ஏற்பட்ட கருப்பு கறை. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியதால் பாஜக ஆதரவாளர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர். காலையில் இருந்து பாஜக ஆதரவாளர்கள் பலர் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் அதிர்ச்சியை கூறினர்.
மாடுகளை காக்க வேண்டும் என்று சொன்னவர்களே இப்போது மாடுகள் வதைக்கு அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுகின்றனர். அதுவும் உச்ச நீதிமன்ற தடை இருந்தும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி உள்ளனர். விலங்குகள் வதை தடை சட்டம் கடந்த 1960-ம் ஆண்டு முதலே உள்ளது. மேலும், காளைகளை காட்சிப்படுத்த அல்லது பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்த கடந்த 2011-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை தடை விதித்துள்ளது.
இவ்வாறு பூர்வா ஜோஷிபுரா கூறினார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியால் மாடுகள் மட்டுமின்றி மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு மூலம் 1,100 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பீட்டா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Chennai Today News: PETA slams Centre’s decision to allow jallikattu