புதிய ஸ்மார்ட் போன் ரகங்களை அறிமுகம் செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் எல்ஜி நிறுவனமும் சேர்ந்துள்ளது. மார்ச் முதல் தேதி நடைபெறும் சர்வதேச மொபைல் கண்காட்சியில் எல்ஜி வியரபிள் ரக சாதனத்தை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பிடையே இந்நிறுவனம் புதிய ஸ்மார்ட் போன் வரிசையுடனும் தயாராக உள்ளது. எல்ஜி மேக்னா, ஸ்பிரிட், லியான், ஜாய் ஆகிய நான்கு ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் ஆகின்றன. நான்குமே விலையில் இடைப்பட்ட பிரிவில் இருக்கும் என்று எல்ஜி தெரிவித்துள்ளது. இவை எல்டி.இ, 3ஜி வடிவங்களில் கிடைக்கும்.

மேக்னாவும் ஸ்பிரிட்டும் உள்ளங்கையில் அழகாக உட்காரும் வகையில் வளைந்த வடிவமைப்பைக் கொண்டிருக்கும். மேக்னா 5 அங்குலத் திரையும் இரட்டை காமிராவும் கொண்டது. ஸ்பிரிட் 4.7 அங்குல திரையும் 8 மெகாபிகசல் காமிராவும் கொண்டது. லியான் 4.5 அங்குல திரையும், ஜாய் 4 அங்குல திரையும் கொண்டிருக்கும்.

நான்கு போன்களும் ஆண்ட்ராய்ட் லாலிபாப்பில் இயங்கக் கூடியவை. உடலில் இருந்து 1.5 மீட்டர் தள்ளி வைத்துக்கொண்டாலும் அதன் காமிரா கெஸ்சர் ஆற்றல் கொண்டது என்பது தான் இந்த போன்களின் சிறப்பம்சம். செல்ஃபி ஸ்டிக் பயன்படுத்த இவை ஏற்றவை. சமீபத்திய செய்திகள், மிஸ்டு கால்கள் ஆகியவற்றை உடனே பார்க்கும் வசதியும் இருக்கிறது.