பிரபல ஓவியர்களின் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்களின் பார்வையிலும் பிகாசா வரைந்த ஓவியங்களுக்கு என்று ஒரு தனி மரியாதை ஒன்று. அவருடைய ஓவியங்கள் ஏலத்திற்கு வரும்போதெல்லாம் பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் அதிக விலைக்கு அவருடைய ஓவியங்களை வாங்க போட்டி போடுவதுண்டு.
இந்நிலையில் பிகாசோ கடந்த 1955 ஆம் ஆண்டில் வரைந்த “உமன் ஆப் அல்ஜியர்ஸ்” என்ற ஒவியம் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் நேற்று ஏலம் விடப்பட்டது. இந்த ஓவியத்தை ஏலம் எடுக்க உலகின் முன்னணி கோடீஸ்வரர்களின் பிரதிநிதிகள் குவிந்திருந்தனர். வெறும் 12 நிமிடங்களே நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஏலத்தின் இறுதி தொகை அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்திய மதிப்பில் இந்த ஓவியம் ரூ.1150 கோடிக்கு விலை போனதுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். காரணம், உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் இதுதான். இந்த ஓவியம் 179 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 1150 கோடி ரூபாய்) விலைபோனது.
இந்த ஓவியம் மட்டுமில்லாமல் பல உலகப்புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பக்கலை வல்லுநர்களின் சிற்பங்களும் நேற்று பல மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதற்கு முன் பிரான்சிஸ் பேக்கன் என்ற ஓவியர் தீட்டிய “திரீ ஸ்டடீஸ் ஆப் லூசியன் பிராட்” என்ற ஓவியம் 866 கோடி ரூபாய்க்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.