சசிகலா பதவியேற்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்த வேண்டும். பொதுநல வழக்கு தாக்கல்
சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பாக, அதன் நிர்வாகி செந்தில் குமார் பொது நல மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக முதல்வராக இன்று சசிகலா பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் கவர்னரின் தமிழக வருகை திடீரென தாமதம் ஆனது. எனவே இன்று அவர் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற, சில வாரங்களிலேயே, தமிழக முதல்வராகவும் பதவியேற்கிறார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதுதொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பாக, அதன் நிர்வாகி செந்தில் குமார் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், விரைவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கின் கீழமை நீதிமன்ற விசாரணையின்போது, ஜெயலலிதா உள்ளிட்டோரை குற்றவாளிகளாக அறிவித்து, சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனால், ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார்.
ஆனால், தற்போதைய அரசியல் சூழல் வேறாக உள்ளது. நல்ல முறையில் பன்னீர்செல்வம், முதல்வராகப் பணியாற்றி வருகிறார். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக, ராஜினாமா செய்ய வைத்து, சசிகலா புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளார். விரைவிலேயே, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்டோர் சிறைக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் புதிய முதல்வரை நியமிப்பதில் சிக்கல் ஏற்படும். வீண் கால விரயம் ஏற்படுத்தும் இத்தகைய பணிகளை, சுப்ரீம் கோர்ட் தலையிட்டு, நிறுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.