வயலின் இசைக்கலைஞராக இருக்கும் ஹீரோ நாகா சினிமாவில் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை செய்து கொண்டு வருகிறார். ஒருநாள் நாகா காரில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் ஒரு அதிர்ச்சிகரமான விபத்து ஒன்றை பார்க்கிறார். அந்த விபத்தில் ஹீரோயின் பிரயாகா ரத்த வெள்ளத்தில் அடிப்பட்டு சீரியஸாக இருக்கின்றார். இவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது ஹீரோயின் கையை பிடித்தபடியே பிரயாகா இறந்து விடுகிறாள்.
பிரயாகாவை காப்பாற்ற முடியவில்லை என்று எண்ணி வருந்தும் நாகா இந்த துக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக நண்பனின் அறிவுரைப்படி சரக்கு அடிக்க முடிவு செய்கிறார். ஆனால் இவரை சரக்கு குடிக்க விடாமல் திடீர் என்று மதுபாட்டில்கள் தானாக உடைந்து நொறுங்குகின்றன. அப்போதுதான் அந்த வீட்டில் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை நாகா உணர்கிறார்.
வீட்டில் தொல்லைப்படுத்தும் பிசாசுவை விரட்டுவதற்காக நாகா அழைத்து வந்த வந்த பூசாரியையும் பிசாசு கொன்று விடுகிறது. ஒரு கட்டத்தில் தன் கையை பிடித்துக்கொண்டே இறந்த பிரயாகாவின் ஆவிதான் அந்த பிசாசு என்பது நாகாவுக்கு தெரிய வருகிறது. இந்நிலையில் நாகாவின் அம்மாவும் அதே பிசாசுவால் தாக்கப்படுகிறார். ஆனால் நல்லவேளையாக பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்ந்து உயிர்பிழைக்கிறார். தன்னுடைய அம்மாவையே பிசாசு தாக்கியதால் அந்த பிசாசுவை எப்படியாவது விரட்டவேண்டும் என்று முடிவு செய்யும் நாகா பிரயாகாவின் அப்பாவான ராதாரவியை தேடிக் கண்டுபிடித்து பிசாசுவை விரட்ட வைக்கிறான். ராதாரவியோ பிசாசுவை அழைத்து பேசிப்பார்க்கின்றார். ஆனால் பிசாசு அங்கிருந்து செல்ல மறுக்கிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து நாகாவின் அம்மா போன் செய்து, வீட்டில் பிசாசு இருப்பது உண்மைதான். ஆனால் அந்த பிசாசுதான் என்னை காப்பாற்றியது என்று கூறுகிறார். இதனால் அங்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பிசாசு காரணமில்லை. பிசாசு பெயரை பயன்படுத்தி வேறு யாரோ இந்த வேலையை செய்கின்றனர் என்பதை உணரும் நாகா, அந்த மர்ம நபரை தேடுவதில் முயற்சி செய்கிறார். இந்நிலையில் பிரயாகாவை கொலை செய்த நபர்தான் தன்னையும் பிசாசு பெயரில் மிரட்டுவது தெரிய நாகாவுக்கு வருகிறது. இறுதியில் பிரயாகாவை கொலை செய்தது யார்? அவரை நாகா பழி வாங்கினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நாகா, படம் முழுவதும் முகத்தை முடியால் மூடிய படியே நடித்திருக்கிறார். அவ்வப்போது தெரியும் கண்களில் ஆயிரம் அர்த்தங்களை கொண்டு நடித்திருக்கிறார். பிசாசுவால் பயந்து அலறும்போதும் நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார். நாயகி பிரயாகா அழகாக இருக்கிறார். ஆனால் காட்சிகள் குறைவு. பிசாசாகவே அதிக காட்சிகளில் வருகிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் ராதாரவி சிறப்பான நடிப்பால் மனதில் நிற்கிறார்.
இயக்குனர் மிஷ்கின் வழக்கம் போல் தன் படங்களுக்குண்டான வித்தியாசமான திரைக்கதையுடன் இப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி பிசாசுடனும் இரண்டாம் பாதி நாயகி இறந்ததற்கான காரணத்தையும் தேடும் வகையில் அமைத்திருக்கிறார். இறந்தவர்கள் பிசாசு இல்லை, உயிருடன் இருக்கும் மனிதர்களில் பழிவாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் தான் பிசாசு என்ற கருத்தை அவருக்கே உரிய பாணியில் சிறப்பாக சொல்லியிருக்கிறார்.
மிஷ்கின் படங்களில் வரும் வித்தியாசமான ஒளிப்பதிவை இப்படத்திலும் பார்க்கலாம். அதை ஒளிப்பதிவாளர் ரவி ராய் சிறப்பாக செய்திருக்கிறார். அரோலின் இசையில் ‘போகும் பாதை…’ பாடல் மனதில் பதிகிறது. பின்னணி இசையிலும் அதிக கவனம் ஈர்த்திருக்கிறார். படத்திற்கு கூடுதல் பலமாக பின்னணி இசையில் பேய் படங்களுக்கு உண்டான இசையை கொடுத்திருக்கிறார். எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங் உள்ளிட்ட வேலைகளும் படத்தில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றன.
மொத்தத்தில் ‘பிசாசு’ மிரட்டல்.