சான்ட்விச்சுக்காக விமானத்தையே நிறுத்திய விமானி!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மான்செஸ்டர் வழியாக நியூயார்க் வரை செல்லும் பிகே-711 என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று உள்நாட்டு நேரப்படி காலை 6.45 மணிக்குப் புறப்படத் தயாராக நின்றது.

அந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கும், விமானிகளுக்கும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளபடி மதிய உணவு, வேர்க்கடலை, சிப்ஸ் மற்றும் பிஸ்கெட்டுகளை கேட்டரிங் துறை அளித்தது.

ஆனால் விமானத்தின் விமானியான நௌஷத் தனக்கு சான்ட்விச் அளிக்குமாறு கேட்டுள்ளார். மெனுவில் குறிப்பிட்டுள்ளதைத்தவிர வேறு எதையும் அளிக்கமுடியாது என்று கூறிய கேட்டரிங் ஊழியரிடம் தனக்கு சான்ட்விச் வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்திய நௌஷத், நட்சத்திர உணவகத்திலிருந்து உடனடியாக சான்ட்விச் ஆர்டர் செய்து தருமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து, நட்சத்திர உணவகம் ஒன்றில் இந்த சான்ட்விச்சை ஆர்டர் கொடுத்து பெற்று வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. இதனால் விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக 9.15 மணி அளவில் புறப்பட்டு சென்றது.

கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் நீண்டதூர சர்வதேசப்பயணங்களில் செலவைக் குறைக்கும் விதமாக சான்ட்விச் கொடுப்பது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக சிப்ஸ், பிஸ்கெட்டுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால், விமானி ஒருவரின் பிடிவாதத்தால் சர்வதேச விமானம் ஒன்று இரண்டரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply