சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் உட்பட எந்தவொரு வடிவிலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என கேரள ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கார்த்திகை மாதம் விரதம் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் வருவதுண்டு. பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில் அவர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களால் அந்த பகுதியின் வனப்பகுதிகளில் சுற்றுச்சுழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. குவியல் குவியலாக மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் தோட்டதில் பி.ராதாகிருஷ்ணன் மற்றும் அனு சிவராமன் அடங்கிய அமர்வு இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி சபரிமலை சன்னிதானம், பம்பா, நிலக்கல் உட்பட சபரிமலையின் எந்தவொரு பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. குடிநீர் பாட்டில்கள் உட்பட எந்தவொரு வடிவிலும் பிளாஸ்டிக் பொருட்கள் சபரிமலைக்குள் நுழையவும் அனுமதிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் சுமந்து வரும் இருமுடியிலும் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருவதற்கு ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு கேரள ஐகோர்ட் தடை விதித்திருந்தது யாவரும் அறிந்ததே.