வீரர்களின் சம்பளப் பிரச்சனை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அந்தநாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், இந்திய அணியுடான கிரிக்கெட் தொடர் பாதிக்கப்படாது என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இந்த பிரச்சனை மேற்கிந்திய தீவுகள் வீரர்களுக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையேயான பிரச்சனை என்றும் இந்த பிரச்சனையில் பிசிசிஐ தலையிட முடியாது என்றும் பி.சி.சி.ஐ செயலாளர் சஞ்சய் படேல் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டிளித்த பி.சி.சி.ஐ செயலாளர் சஞ்சய் படேல், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசியிருப்பதாக தெரிவித்தார். இருநாடுகளுக்கு இடையேயான தொடர் எந்த வகையிலும் பாதிப்படையாது என அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.
5 ஒருநாள், மூன்று டெஸ்ட், மற்றும் ஒரு ட்வெண்டி ட்வெண்டி போட்டி கொண்ட தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் சஞ்சய் படேல் தெரிவித்துள்ளார். முதல் ஒருநாள் போட்டி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பணம் வழங்கியிருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மையல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.