நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ், ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புத்துணர்ச்சி மிக்க பிளம்ஸ் பழத்தில் விட்டமின் சி, நிறைந்துள்ளது. இது மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்பட வல்லது. உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பதில், விட்டமின் சி யின் பங்கு மகத்தானது.
தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் தன்மையும் விட்டமின் சி-க்கு உண்டு. விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் பிளம்ஸ் பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. விட்டமின் ஏ, பார்வைத் திறனுக்கு மிக அவசியமானது. நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் விட்டமின் ஏ-விற்கு உள்ளது. பொட்டாசியம், புளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ளன. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புத்தாது மிக அவசியம்.
பொட்டாசியம் உடலை வளவளப்பு தன்மையுடன் வைப்பதிலும், இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் பங்கெடுக்கிறது. பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு விட்டமின் கே, உள்ளது. இது இரத்தம் உறைதலில் உதவுவதுடன், அல்சீமர் போன்ற பாதிப்புகளை குறைப்பதிலும் பயன்படுகிறது. கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக சுருங்கி விரிகிறது. இது இதயகோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது.
இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம்ஸ் பழங்களை சாப்பிடலாம். இரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். ரத்தத்தை சுத்திகரிக்க பிளம்ஸ் பழங்களை சுவைக்கலாம். பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவு நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
தினமும் உணவு உட்கொண்ட பின்னர் பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும். பூரிதமாகாத கொழுப்புகள் இதில் இல்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச் சத்துக்கள் உள்ளன. பிளம்ஸ் பழங்கள் தோலுடன் அப்படியே சுவைத்துச் சாப்பிட ஏற்றது. இனிப்பு சுவையுடன், சாறு நிறைந்த இதனை களிப்புடன் சாப்பிடலாம்.