சொத்துக்குவிப்பு வழக்கில் தன்னை நிரபராதி என்று நிரூபித்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய, மாநில அமைச்சர்கள், கவர்னர் ரோசய்யா, நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் , ”அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டில், கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
அதேபோல், தமிழ்நாடு கவர்னர் ரோசய்யா ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு, பூங்கொத்து ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
மேலும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் தங்களது நல்வாழ்த்துகளை தொலைபேசி மூலம் ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக் கொண்டனர்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல்குமார் அஞ்சன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா ஆகியோர் தங்களது வாழ்த்துகளை ஜெயலலிதாவுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏ., அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் உ. தனியரசு எம்.எல்.ஏ., மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பெ.ஜான் பாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.பஷீர் அகமது, தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் எஸ்.ஷேக் தாவூத் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், தமிழக சட்டமன்ற சபாநாயகர் மதுசூதனன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திரைப்பட பிரபலங்கள்
நடிகர் ரஜினிகாந்த், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, திரைப்படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் வி. ரவிச்சந்திரன், திரைப்படக் கலைஞர்களான சரோஜாதேவி, விஜயசாந்தி, குமாரி சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, ரோஜா, விந்தியா, ஜி.ராம்குமார், பிரபு, சூர்யா, விக்ரம் பிரபு, ராமராஜன், தியாகு, விவேக், குண்டுகல்யாணம், மனோபாலா, செந்தில், பொன்னம்பலம், அஜய் ரத்னம், சரவணன், சிங்கமுத்து, வையாபுரி உள்ளிட்டோர் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்” எனக் கூறப்பட்டுள்ளது.