பிரதமருடன் புன்சிரிப்புடன் கைகுலுக்கிய ராகுல்காந்தி. சரத்பவார் பிறந்த நாள் விழாவில் ருசிகரம்
கடந்த சில நாட்களாக பாரத பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்த் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேருக்கு நேர் சந்தித்து புன்சிரிப்புடன் கைகுலுக்கி கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இன்று காலை தலைநகர் டெல்லியில் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரின் பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கி வரவேற்றார். பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த அனைத்து தலைவர்களும் இந்த நிகழ்வை வியப்புடன் பார்த்து ரசித்தனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இது பா.ஜனதா அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ராகுல்காந்தி, பிரதமரை மிகவும் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் இப்பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே நேற்று பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் ராகுலும், மோடியும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கிக்கொண்ட நிகழ்வு இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் சூட்டை தணித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் விழா முடிந்தவுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதா ஆட்சியில் உள்ள மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
English Summary: PM Modi and Rahul Gandhi shake hands at Sharad Pawar’s birthday celebrations