வங்கதேசத்தில் மோடி, மம்தாவுக்கு சிறப்பான வரவேற்பு. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

modiபாரத பிரதமர் நரேந்திர மோடியும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசத்திற்கு இன்று சென்றடைந்தனர். அவர்களுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா சிறப்பான வரவேற்பை கொடுத்தார். வங்கதேசத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை சிறப்பாக வரவேற்றனர்.

வங்கதேசத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து டுவிட்டரில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “உற்சாக வரவேற்பு அளித்ததாற்காக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நன்றி” என்று கூறியுள்ளார். இதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியபோது “இப்போதுதான் தான் வங்கதேச மண்ணில் கால் வைத்தேன். இங்கிருந்தபடியே டுவீட்டும் முதல் பதிவு இது. வங்கதேச சகோதர, சகோதரிகளுக்கு என் வணக்கங்கள். இந்தியா – வங்கதெசம் இடையிலான எல்லை ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா – அகர்தலா, டாக்கா – ஷில்லாங் – கெளஹாத்தி ஆகிய பகுதிகளுக்கு இடையே பேருந்து இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் வங்கதேச பிரதமர் ஹசீனா ஆகியோர் இணந்து தொடங்கி வைக்கவுள்ளனர்.

மேலும் இரு நாடுகளுக்கு இடையே நீண்டநாள் பிரச்சினை இருந்து வரும் தீஸ்தா நதிநீர் பங்கீடு குறித்து முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி தனது பயணத்தில், வங்கதேச அதிபர் முகமது அப்துல் ஹமீதையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசம் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply