பீகாரில் சட்டமன்ற தேர்தல் ஐந்து கட்டமாக நடந்து கொண்டிருக்கின்றது. மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் நான்காவது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி பீகாரில் சுற்றுப்பயணம்
செய்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று கோபால்கஞ்ச் நகரில் பேசிய பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் மத
ரீதியான இட ஒதுக்கீடு தேவை என கூறியதை மறுக்க முடியுமா? என நிதிஷ்குமாருக்கு அவர் சவால் விட்டுள்ளார்.
மோடி மேலும் பேசியதாவது: ”மெகா கூட்டணி அமைத்து இருப்பவர்கள், மத ரீதியாக இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சித்து வருவதாக பச்சைப் பொய்யைக் கூறி வருகின்றனர். ஆனால், முன்பு நாடாளுமன்றத்தில் பேசியபோது நிதிஷ்குமார் மத ரீதியான இட ஒதுக்கீடு தேவை என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதை அவரால் மறுக்க முடியுமா? எனது இந்த குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறேன். எனவே தைரியம் இருந்தால் நிதிஷ்குமார் இதற்கு வெளிப்படையாக பதில் அளிக்க வேண்டும்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்காமல் நிதிஷ்குமார் மந்திரவாதிகளின் ஆசிர்வாதங்களை எதிர்பார்க்கிறார். பீகார் மக்களின் பிரச்னைகளை தீர்க்க வளர்ச்சி ஒன்று மட்டுமே உதவும். மந்திரவாதிகளால் எந்த பயனும் இல்லை. பீகார் மாநிலத்தில் பல்வேறு ஊழல்களால் மாநில அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பிறகு, மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்ததும் ஊழல் என்னும் பயங்கரம் அகற்றப்படும்.
முந்தைய காலம் மீண்டும் திரும்பும் என்று நிதிஷ்குமார் சிந்திக்காமல் கூறுகிறார். முன்பு கடத்தல், வழிப்பறி, கொள்ளை, பெண்களுக்கு அவமரியாதை, தலித்துகளுக்கு தொந்தரவு போன்றவைதான் அன்றாட நிகழ்வுகளாக இருந்தன. ரயில் நிலையங்களில் எப்போதும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதைத்தான் அவர் கூறுகிறாரா?… இந்த பகுதியை நீங்கள் (நிதிஷ்குமார்) ‘மினி சம்பல்’ பள்ளத்தாக்கு பகுதியாக மாற்ற விரும்புகிறீர்களா? பதவிமோகம் கொண்ட நீங்கள் வேண்டுமானால் இதை விரும்பலாம். ஆனால் பீகார் மக்கள் விரும்பமாட்டார்கள்.
படா பாய் (லாலு பிரசாத்) தனது மகன்கள், தனது குடும்பம் பற்றியே எப்போதும் சிந்திப்பார். முன்பு அவர் சிறைக்கு சென்றபோது, தனது மனைவியை முதலமைச்சர் ஆக்கினார். இனி மீதிக்காலத்தை சிறையில்தான் கழிக்க முடியும் என்பதை அறிந்திருப்பதால் மகன்களை அரசியலுக்கு கொண்டு வந்திருக்கிறார். இவர்களைப் போன்றவர்களிடம் பீகார் சிக்க வேண்டுமா? ஊழலுக்கு எதிரானவர்கள் மீது இரட்டை நிலையை நிதிஷ்குமார் கையாளுகிறார். அதனால் அவரை பீகார் மக்கள் வரும் தேர்தலில் மன்னிக்க மாட்டார்கள். நீண்ட காலம் தங்களுக்கு அநீதி இழைத்தவர்களை இந்த முறை அவர்கள் சும்மாவிடமாட்டார்கள், தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்றார் ஆவேசமாக.
பிரதமர் மோடி தனது பேச்சின்போது, நிதிஷ்குமார் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய உரையின் நகலை காண்பித்து அவருக்கு இவ்வாறு சவால் விடுத்தார்.
English Summary: PM Modi challenge to Niteshkumar