கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போதும், தேர்தலுக்கு பின்னரும் எதிரும் புதிருமாக இருந்த நரேந்திர மோடி மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சமீபத்தில் சந்தித்து கொண்டதை எதிர்க்கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனம் செய்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சந்தித்துப் பேசியது, அரசியல் சந்தர்ப்பவாதமாகும் என்றும், ஒருவரை ஒருவர் பாதுகாத்து கொள்ளவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் பல எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் முகமது சலீம், கொல்கத்தாவில் நேற்று செய்தியாளரிடம் கூறியதாவது: இந்தச் சந்திப்பு, கடந்த ஓராண்டாக இரு தலைவர்களும் நடத்தி வந்த நாடகத்தின் கிளமாக்ஸ் காட்சியாகும். சிபிஐ பிடியில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் தப்பிக்கவும், மாநிலங்களவையில் மக்கள் விரோத மசோதாக்கள் நிறைவேறவும் இந்தச் சந்திப்பு உதவியாக இருக்குமே தவிர பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் நன்மை ஏற்படாது என முகமது சலீம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பை காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. “சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் சிறைத் தண்டனை பெற்றது குறித்து மோடி மெளனம் சாதித்து வருகிறார். இதன் மூலம், இரு தரப்பினருக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது என காங்கிரஸ் கட்சியின் மேற்குவங்க தலைவர் அப்துல் மன்னன் கூறியுள்ளார். இதனிடையே, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு, பாஜகவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் மறுப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.