சோனி, ஈ.எஸ்.பி.என் உள்பட முக்கிய நிறுவனங்களின் சி.இ.ஓக்களுடன் பிரதமர் சந்திப்பு
அமெரிக்க சுற்றுப்பயணம் செய்து வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று நியூயார்க் நகரில் டிஸ்கவரி, சோனி உள்பட சர்வதேச நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். “இந்தியாவுக்கான அலைவரிசையை மேலும் விரிவாக்க தலைமை செயல் அதிகாரிகளுடனான வட்ட மேஜை சந்திப்பில் மோடி உரையாடி வருவதாக அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
டிஸ்கவரி, சோனி, ஈ.எஸ்.பி.என், டிஸ்னி இண்டஸ்ட்ரீஸ், ட்வெண்டி பர்ஸ்ட் செண்ட்யுரி ஃபாக்ஸ், நியூஸ் கார்ப் போன்ற சர்வதேச தொலைக்காட்சி மற்றும் தொடர்பியல் நிறுவங்களின் தலைமை செயல் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதால் இந்த சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊடகம் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்ப உலகின் சமீபத்திய நிலவரங்கள், மற்றும் அதில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் குறித்து இந்த நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களுடன் மோடி உரையாடினார். தனது 6 நாள் அமெரிக்க பயணத்தில், அதிபர் ஒபாமா உட்பட இன்னும் பல முக்கிய தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.