டெல்லி சட்டசபை தேர்தல் வரலாற்று சிறப்புமிக்க வகையில் 67 தொகுதிகளை வென்று கம்பீரமாக முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
புதுடில்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு வருகை தந்தஅரவிந்த் கெஜ்ரிவாலை, நரேந்திர மோடி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வரவேற்றார். இருவரும் சுமார் 15 நிமிடங்கள் சந்தித்து பேசினர்.
பிரதமரின் சந்திப்பின்போது டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது குறித்து அவர் பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், தான் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளுமாறு, நரேந்திர மோடிக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். ஆனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதால் தன்னால் இந்த விழாவில் பங்கேற்க இயலாது என்றும் எனினும் தனது வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்வதாகவும் மோடி கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த சந்திப்பின்போது
ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா உடனிருந்தார்.
நாளை மறுநாள் டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொள்கிறார். ராம்லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் 40 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.