ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகருக்கு சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, அங்கு குவீன்ஸ்லாந்து நகரில் மகாத்மா காந்தியின் சிலையை நேற்று திறந்து வைத்தார்.
2 1/2 மீட்டர் உயரத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்ட காந்தியின் உருவச்சிலையை குவீஸ்லாந்தில் உள்ள ரோமா ஸ்ட்ரீட் பகுதியில் மோடி திறந்து வைத்தார்.
குஜராத்தின் போர்பந்தர் நகரில் அக்டோபர் மாதம் 2-ம் தேதி ஒரு மனிதர் மட்டும் பிறக்கவில்லை. ஒரு சகாப்தமே பிறந்தது. தனது வாழ்நாளின்போது இருந்தது போலவே இன்றும் காந்தி நம்முடன் உயிர்ப்புடன் இருப்பதாகவே நான் அழுத்தமாக நம்புகிறேன்.
காந்தியின் வாழ்க்கையையும், அவரது போதனைகளையும் நாம் ஆராய்கையில் இன்று இந்த உலகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு காண முடியும். ஒருவரின் சொல்லிலும், செயலிலும் மட்டும் அவர் நம்பிக்கை வைக்கவில்லை. அவர்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர் நம்பினார்.
யாரையும் ஆயுதங்களால் மட்டுமல்ல; கடும் சொற்களால் கூட நாம் தாக்க கூடாது என்ற நம்பிக்கையை அவர் நம் மீது வைத்திருந்தார். அவரது அகிம்சை கொள்கையினை இந்த உலகம் முழுவதும் முழு நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்று நிலவும் பல பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு கண்டுவிட்டிருக்க முடியும்.
இன்றோ, மேலும், மேலும் ஆயுதப் பிரயோகமும், இவற்றின் விளைவாக ஏராளமான அப்பாவி மக்களின் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அகிம்சை வழியை கடைப்பிடித்திருந்தால் இந்த இழப்புகளில் இருந்து உலகை நாம் காப்பாற்றி இருக்க முடியும்.
காந்தியின் வன்முறையற்ற போராட்டம் அல்லது அகிம்சைக் கொள்கை என்பது வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய ஒரு ஆயுதம் மட்டுமல்ல; நம்பிக்கை நிறைந்த ஒரு பாத்திரமும்கூட என்பதை நாம் உணர வேண்டும். அனைவருக்கும் மரியாதை-அனைவருக்குமான சமதர்மம் என்பதன் மூலமாகவே இந்த உலகை முன்னேற்றிச் செல்ல முடியும்.
இயற்கையை எப்போதுமே நேசித்துவந்த காந்தி, தனது வாழ்க்கை முறையிலும் அதை கடைபிடித்து வந்தார். ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நிறைவேற்றும் சக்தி கொண்ட இயற்கையிடம் பேராசைக்கார மனிதனின் தேவையை நிறைவேற்ற மட்டும் ஏதுமில்லை என்று காந்தி குறிப்பிட்டுள்ளார்.
நீதியான முறையில் நாம் இயற்கையை பயன்படுத்தி இருந்தால் இயற்கை சீரழிவு என்ற பயங்கரத்தை இந்த உலகம் தவிர்த்திருக்கும். காலம் கடந்து, மெதுவாக உணர்ந்தாலும் காந்தியின் பெரிய செய்தியை இந்த உலகம் தற்போது சாதகமான முறையில் உணரத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.