சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்கள் பட்டியலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பெயரும் இடம்பெற்றுள்ளதாக ‘டைம்’ பத்திரிகையின் சர்வே தெரிவித்துள்ளது.\
சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டரில் செல்வாக்கு நிறைந்தவர்கள் குறித்த சர்வே ஒன்றை அமெரிக்காவின் டைம் பத்திரிகை சமீபத்தில் எடுத்தது. 30 பேர் கொண்ட இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹாரிபாட்டர் நாவல் ஆசிரியர் ஜே.கே.ரெளலிங், பிரபல பாடகர்கள் டெய்லர் ஸ்விஃப்ட், பியோன்ஸ், அமெரிக்க தொலைக்காட்சி நடிகை கிம் கர்டாஷியான், பாப் இசைப் பாடகி ஷகீரா, பாடகர் ஜஸ்டின் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, “டைம்’ பத்திரிகை வெளியிட்ட செய்தி:
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமூக வலைதளப் பக்கங்கûளை உலக அளவில் அதிகம் பேர் பின்பற்றுகின்றனர். “பஸ்ஃபீட்’ என்ற அமெரிக்க இணையதள ஊடகத்தில் மருத்துவக் காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விடியோ காட்சி ஒன்றை ஒபாமா பதிவு செய்திருந்தார். அதை 5 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை பார்த்துள்ளனர். சமகாலத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்களைப் போல அல்லாமல், இணையதளத்தின் வாயிலாக 20 கோடிக்கும் அதிகமான மக்களை நேரடியாகச் சென்றடைய முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நம்புகிறார்.
சமூக வலைதளங்களை தீவிரமாகப் பயன்படுத்தும் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை வழக்கத்துக்கு மாறாக சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தின் வாயிலாக வெளியிட்டார். மோடியின் சுட்டுரை, முகநூல் கணக்குகளை சுமார் 4 கோடி பேர் பின்பற்றுகின்றனர் என்று “டைம்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.