டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி திடீர் பயணம். பயணிகள் ஆச்சரியம்
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் புதுடெல்லியில் இருந்து செயற்கைக்கோள் நகரான பரீதாபாத்திற்கு செல்லும் பாதர்பூர் மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்கும் நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் பயணிகளோடு பயணியாக டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். மெட்ரோ ரயிலில் பிரதமர் பயணம் செய்ததை டெல்லி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பிரதமர் மோடி நேற்று பரீதாபாத் நகரத்திற்கு ஹெலிகாப்டர் ஒன்றில் செல்லவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென ஜன்பத் ரயில் நிலையத்தில் வயலட் வழித்தடத்தில் மெட்ரோ ரயிலில் பிரதமர் ஏறினார். அது பரீதாபாத்தின் பேட்டா சவுக் நிலையத்திற்கு செல்லும் ரயில் ஆகும். ரயிலில் பயணம் செய்த பயணிகள் மற்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் அவரை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
வழக்கம்போல் ரயிலில் செல்லும் பயணிகளுடன் மோடி உரையாடினார். பின்னர் பிரதமருடன் இணைந்து பல பயணிகள் செல்பிக்களை எடுத்து கொண்டனர். அவருடன், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, வீரேந்தர் சிங், ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசனின் தலைவர் மாங்கு சிங் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்த பயண பிரிவு தொடங்குவதை அடுத்து தலைநகர் டெல்லிக்கும் அரியானாவின் தொழில் மைய நகரான பரீதாபாத்திற்கும் இடையே நாள்தோறும் 2 லட்சம் பேர் எளிதில் பயணம் மேற்கொள்ள இது உதவும்.