இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக நேபாளம் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி காட்மண்டு நகரில் உள்ள புகழ்மிக்க பசுபதிநாத் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
நேபாள நாட்டில் உள்ள காட்மாண்டு நகரில் இருந்து 3 கிமீ தூரத்தில் பகாமதி என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள பசுபதிநாத் கோவில் உலக பிரசித்தி பெற்றது. நேற்று அஷ்டமி நாளில் அந்த கோவிலுக்கு காவி நிறத்தில் உடையணிந்து சென்ற பிரதமர் மோடி, சிறப்பு பூஜைகளை பார்வையிட்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். நேற்றைய சிறப்பு பூஜையில் தென் இந்திய பூசாரி கணேஷ் பட் தலைமையில் 108 பிராமண பூசாரிகள் வேத மந்திரங்கள் ஓத சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு பூஜை பிரதமர் மோடிக்காகவே நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வழிபாட்டை முடித்த பின்னர் கோவிலில் இருந்த பார்வையாளர் புத்தகத்தில், “பசுபதிநாதரும், காசி விஸ்வநாதரும் (வாரணாசி) ஒருவரே. நான் மிகவும் மன மகிழ்ச்சியுடன் உள்ளேன். இந்தியாவையும், நேபாளத்தையும் இணைக்கும் பசுபதிநாதரின் ஆசியை பெறுவதற்காக பிரார்த்தனை நடத்தினேன். இருநாட்டு மக்களின் நலனுக்காக இந்த நட்பு தொடர வேண்டும்” என்று குறிப்புகள் எழுதினார்.
பின்னர் நேபாள பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய மோடி மதிய விருந்தை அவருடன் சேர்ந்து சாப்பிட்டார். விருந்துக்கு பின்னர் நேபாள பிரதமர் மோடி குறித்து கூறுகையில் “இந்திய ராமர் நேபாள மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டுவிட்டார்” என்று கூறினார்.