ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றார். புறப்படுவதற்கு முன் அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தனது உயிர் நண்பரான ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே- அவர்களின் அழைப்பையேற்று ஜப்பான் செல்வாதாகவும், இந்தியா-ஜப்பான் இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதில் ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய ஜப்பான் நாடுகளிடையிலான உறவுகளை தனது பயணம் அடுத்த உயர்வான கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு செல்வதற்கு முன்னர் ஜப்பானின் ஸ்மார்ட் சிட்டி என்றழைக்கப்படும் கியோட்டோ நகருக்கு முதலில் பிரதமர் செல்கிறார். அதேபோன்று பல்வேறு ஸ்மார்ட் சிட்டிகளை இந்தியாவில் வடிவமைக்க தேவையான நடவடிக்கைகளை அவர் எடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. பின்னர் திங்கட்கிழமை அன்று டோக்கியோவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ஜப்பான் பிரதமருடன் கலந்து கொள்கிறார்.
இந்த உச்சி மாநாட்டின்போது, இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு, அணு தொழில்நுட்பம், தொழில்துறை, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாவதுடன் முந்தைய பழைய ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.