இந்திய ரயில்வே வரைபடத்தில் முதன்முறையாக மேகாலயா மாநிலமும் வரும் 29ஆம் தேதி முதல் இணையவிருக்கின்றது. மேகாலய மாநிலத்துக்கு முதல்முறையாக இயக்கப்படும் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 29-ஆம் தேதி தொடக்கிவைக்கிறார். இதுவரை மேகாலாயா மாநிலத்தில் ரயில்சேவை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தில் உள்ள வடக்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மெண்டிபதார் என்ற இடத்தில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் துத்னோய் என்ற இடம் வரை 19.47 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி சமீபத்தில் முடிக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் முதல்முரையாக இயங்கவிருக்கும் ரயில் சேவையை பாரத பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 29-ஆம் தேதி காணொலி காட்சி முறையில் தொடங்கிவைக்க இருக்கின்றார். மேலும், காரோ ஹில்ஸ் மக்களுடன் அவர் காணொலி முறையில் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்லது.
துத்னோய் – மெண்டிபதார் இடையே அகல ரயில் பாதை அமைப்பதற்கு கடந்த 1992-93-ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து,மேகாலய முதல்வர் முகுல் சங்க்மா, கடந்த 2012-ஆம் ஆண்டு இத் திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த அகல ரயில் வழித்தடத்தில், 3 பெரிய மேம்பாலங்கள், 53 சிறு பாலங்கள்,7 சுரங்கப் பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.