ரூ.2000 கோடி கேட்ட சந்திரபாபு நாயுடுக்கு ரூ.1000 கோடி கொடுத்த மோடி.

modiசமீபத்தில் ஆந்திரா மற்றும் ஒடிஷா மாநிலங்களை கடுமையாக தாக்கிய  “ஹுட்ஹுட்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். முதல்கட்டமாக ஆந்திர மாநிலத்திற்கு ரூ.1,000 கோடியை இடைக்கால நிவாரண நிதியாக அறிவித்தார். புயல் நிவாரண நிதியாக சந்திரபாபு நாயுடு ரூ.2000 கோடி மத்திய அரசிடம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி புயலில் உயிரிழந்தோர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

முன்னதாக புதுடில்லியில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்த மோடியை ஆந்திர ஆளுநர் ஈ.எல். நரசிம்மன், முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, அசோக் கஜபதி ராஜு ஆகியோர் வரவேற்றனர். பின்னர் சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து விமானத்தில் இருந்து “ஹுட்ஹுட்’ புயலால் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

புயலின் தாக்கத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி “புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டியுள்ளது. எனவே, சேதங்கள் குறித்து மதிப்பிடுவதற்காக மத்திய அரசு அதிகாரிகள் விரைவில் இப்பகுதிக்கு வருவார்கள். ஆந்திரத்தின் சோகம் எங்களது சோகம். இங்குள்ள மக்களின் முகத்தில் தைரியத்தையும், நம்பிக்கையையும் காண முடிந்தது. அவர்களின் மனநிலையை புயல் பாதிக்கவில்லை. அவர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன் என்று கூறினார்.

Leave a Reply